இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதம்; உளவுத்துறையின் வீழ்ச்சி - ஞா.பிரகாஸ் (ஊடகவியலாளர்)

Search This Blog

Sunday, June 16, 2019

இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதம்; உளவுத்துறையின் வீழ்ச்சி

ஒரு நாட்டினுடைய அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத்துறை தனது நாட்டையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக தேசிய பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக கவனம் கொண்டிருக்க வேண்டியது மிக முக்கிய பொறுப்பாகும். அதிலும், குறிப்பாக மக்களை அழிக்கும் பயங்கரவாதச் சக்திகள் நாட்டுக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதிலும் மிகத் தீவிரமாகவிருக்க வேண்டும். ஆனால், எமது நாட்டில் அது முழுமையாக தோற்றுப் போயிருக்கின்றது. அத்தோல்வி, இன்று எங்கள் நாட்டு மக்களின் உயிரையும், சர்வதேச மக்களின் உயிரையும் பறித்து, இரத்தத்தின் சுவையைச் சுவைக்க வல்லூறுகள் போல்க்காத்திருந்த பயங்கரவாதிகளின் கொடூரமான இரத்த வெறியாட்டத்திற்கு வித்திட்டிருக்கின்றது. இலங்கையில் பேரினவாதிகளினால் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக அன்று தமிழர்கள் ஆயுதம் தூக்கினார்கள். இதன், காரணமாக நாட்டில் 30-ஆண்டு காலம் கொடியயுத்தம் நடைபெற்றது. அவ்யுத்தம், 18.05.2009 அன்று முள்ளிவாய்காலில் முடிவுக்குவந்தது. யுத்தத்தின் போது, பல்லாயிரக் கணக்கிலான தமிழ் மக்கள் அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர், சிங்கள, முஸ்லிம் இளைஞர்கள் உட்பட தமிழர்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர், யுத்தத்தின் இறுதிநாளில் சரணடைந்தவர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர். யுத்தம் முடிவுக்குவந்து 10-ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இவற்றிற்க்கு நீதிகேட்டு தமிழ் மக்கள் பெரும் துயரங்களுடன் பல்வேறு, அச்சங்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், இந்நாடு 30-ஆண்டுகால யுத்தத்தின்போது காணப்பட்ட நிலைமைகளையும் விடப்பெரும் அபாயகரமான பாதாளக்குழிக்குள் வீழ்த்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மக்களினால் இயேசு உயிர்ப்பு விழாவாக கொண்டாடப்படும் உயிர்த்த ஞாயிறு தினமான 21.05.2019 அன்று இச்சிறிய நாட்டை பாதாளக்குழிக்குள் தள்ளிவிட்ட அதிபயங்கரமான தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டது. சிரியா மற்றும் ஈராக்கின் இஸ்லாமிய அரசு (ISIS) என்று அடையாளப்படுத்தப்பட்டு, 2014ம் ஆண்டு முதல் தம்மை உலக இயக்கமாக பிரகடனம் செய்து இஸ்லாமிய அரசு (IS) என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதிகள், இலங்கையில் இயங்கிய தேசிய தௌஹீத் ஜமாஅத் என்னும் அமைப்பை தம்முடன் இணைத்துக்கொண்டு ஒரேநேரத்தில் 3 தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள் மற்றும் 2 இடங்களில் இரத்தவெறிப் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில், 16 சர்வதேச நாடுகளை சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் உட்பட 258 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இவ், இரத்த வெறியாட்டம் இலங்கையை மட்டுமல்லாமல் அத்தனை சர்வதேச நாடுகளையும் உலுக்கியெடுத்த ஒன்றாக மாறியிருக்கின்றது.

இலங்கையில் கடும்போக்குக் கொள்கை உடையவர்களாக இருந்த, இப்போது அரசினால் தடை செய்யப்படிருக்கும் இஸ்லாமிய அமைப்புக்களை மூலைச்சலைவைக்கு உட்படுத்தி சொந்த நாட்டு மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கொடிய சர்வதேச பயங்கரவாதத்தின் நுழைவும் தாக்குதலும் இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம், இனங்களுக்கிடையில் இதுவரை இருந்த ஒற்றுமை, மக்கள் இடையில் காணப்பட்ட அச்சமற்ற சூழ்நிலை. இவை, அனைத்தையும் ஒரேநாளில் உடைத்தெறிந்திருக்கிறது. இந்நிலைக்கு, தீவிரவாதிகளாக மாறிய - மாற்றப்பட்ட இலங்கை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் மட்டுமல்லாது அரசாங்கம் மற்றும் அதனுடைய பாதுகாப்புத்துறையும் பெரும்காரணமாகும். இத்தாக்குதல்களை, தடுத்து நிறுத்துவதற்குரிய, தாக்குதல் திட்டங்களை முறியடிக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்டும் அவற்றையெல்லாம் பாதுகாப்புத்துறையினரும், பாதுகாப்பு அமைச்சும் கண்டும், காணாதது போலவும், அவற்றை சாத்தியமற்றவை எனக்கருதியும், கடந்த 30-ஆண்டு காலமாக எவர்களை நோக்கி தமது உளவுத்துறை பணிகளை செய்தார்களோ, அதையேதான் இறுதிப்போர் நிறைவுற்றிருந்த கடந்த 10-ஆண்டு காலமாகவும் தொடர்ந்து கொண்டிருந்தனர். இதுபோக, இறுதியாக, பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டங்கள் குறித்து இந்திய உளவுத்துறையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதுவும், மேற்குறிப்பிட்ட காரணங்களினால் உதறித்தள்ளப்பட்டது. இதனால், இவை பயங்கரவாதிகளின் அகோர வளர்ச்சிக்கும், சுதந்திரமான தாக்குதலுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது போல் அமைந்துவிட்டது.

குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னர் அரசாங்கம் மூன்று இஸ்லாமிய தீவிரவாத போக்குடைய அமைப்புக்களை தடை செய்திருந்தது. அதில், "தேசிய தௌஹீத் ஜமாஅத்" பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னெடுப்பதில் முக்கியபங்காற்றிய அமைப்பாகும். அவ்வமைப்பின், செயற்பாடுகளை சில ஆண்டுகளுக்கு முன்னர் காத்தான்குடியைச் சேர்ந்த குறிப்பிட்டளவிலான இஸ்லாமிய மக்கள் வெளிச்சம்போட்டுக் காட்டிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அப்போதும், உளவுத்துறையினர் விழித்துக் கொள்ளவில்லை. 13.03.2017 அன்று, தேசிய தௌஹீத் ஜமாஅத் என்பது பயங்கரவாத அமைப்பு, அதன் தலைவராக இருந்த ஷஹ்ரான் ஹஷிம் (உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களின் தலைவன் என்று கூறப்பட்டிருப்பவர்) பயங்கரவாதி என்பதை அம்மக்கள் வெளிப்படுத்தினர். அன்றைய தினம் "ஷஹ்ரான் சாத்தானை கைது செய், நல்லாட்சியில் ஆயுதக் கலாசாரத்தை உட்புகுத்தாதே" போன்ற பதாகைகளுடன், அடிப்படைவாதத்தை தூண்டும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து அப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த, போராட்டமானது தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினால் நிகழ்த்தப்பட்ட வாள்வெட்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியிலேயே இடம்பெற்றது. அதன்மூலம், பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரி ஷஹ்ரான் ஹஷிமின் உண்மை நிலை வெளிப்பட்டிருந்தது. ஆயினும், இவை, இஸ்லாமிய அமைப்பக்களுக்கு இடையிலான மதக் கொள்கை முரண்பாடுகளுக்குள் மழுங்கடிக்கப்பட்டது. அரசு மற்றும் உளவுத்துறையும் அவையனைத்தையும் சந்தேகக்கண் கொண்டுபாராமல், அவற்றை மத முரண்பாடு எனும் கோணத்தில் சாதாரணமாக உதறித்தள்ளிவிட்டிருந்தனர். இங்கு, தான் உளவுத்துறையின் முதலாவது வீழ்ச்சி தொடங்கியது. இவர்களைப், போலவே, அன்று, இவை தொடர்பில் கள்ள மௌனம் சாதித்த இஸ்லாமிய மக்களின் அரசியல் பிரதிநிதிகள், இன்று, ஆர்ப்பாட்டத்தின் புகைப்படப் பிரதிகளை, படப்பிரதி (Photocopy) செய்து ஊடக சந்திப்புக்களில் அதனை காண்பித்து, தாம் மௌனமாக இருந்ததை மறந்துவிட்டு தம்பட்டம் அடிக்க முயற்சிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இதேபோல், 07.03.2018 அன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இருக்கக்கூடிய ஆரயம்பதி பகுதியில் இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகளின் பெயரை தாங்கிய சுலோக அட்டையுடன் வெடி பொருட்கள் சில மீட்கப்பட்டது. அச்சம்பவத்தினை கூட இந்நாட்டு உளவுத்துறை கவனத்தில் கொள்ளவில்லை. அது, கண்டிக்கலவரம் நடந்து கொண்டிருந்தகாலம் என்பதால் அச்சம்பவம் இனவாதத்தின் பெயரினால், இனவாதச் சதிகள் காரணமாக இருக்கலாம் எனும் போக்கில் புதைந்துபோனது. ஆனால், இன்று இதனையும் மீளாய்விற்கு உட்படுத்திப்பார்த்தால் அதனுள் மறைந்திருந்த பாரிய உண்மைகள் மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது. இது, உளவுத்துறையின் இரண்டாவது வீழ்ச்சியாகும். இவ்விரு, விடயங்களிலும் உளவுத்துறையினர், காவற்துறையினர் உட்பட அரசாங்கப் பாதுகாப்புத்துறை பாரிய கண்காணிப்பு தவறை செய்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது, பயங்கரவாதிகளை நெருங்கக்கூடிய சம்பவங்கள் பல நடந்தும் அவற்றை வேறுபல கோணங்களில் நோக்கி, உரிய உளவு விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியிருக்கின்றனர். அது, பயங்கரவாதிகளின் வளரச்சிக்கு வித்திட்டிருக்கின்றது. ஒரு, நாட்டின் உளவுத்துறை இத்தகைய பெரும் உளவுக் குறைபாட்டுடன் இருப்பது பெரும் அழிவுகளுக்கு காரணமாக அமைந்துவிடும் என்பதை இத்தாக்குதல் புடம்போட்டுக் காட்டுகின்றது. ஆனால், உளவுத்துறையின் வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன "பலம்வாய்ந்த, ஐரோப்பிய நாடுகளிலும், பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றது. அதனை, அவர்களினால் தடுக்க முடியவில்லை" என்று சிறுப்பிள்ளைத்தனமான கருத்தை முன்வைத்து சமாளித்துக் கொண்டிருக்கின்றார். ஜனாதிபதியானவர் இதனை சமாளிப்பதை விடுத்து உளவுத்துறையின் வீழ்ச்சியை, குறைபாட்டை ஆராய்ந்து அதனை மாற்றியமைக்க வேண்டும்.

இலங்கை உளவுத்துறையிடம் இக்குறைபாடு ஏன்? ஏற்பட்டது என்று பார்த்தல் "விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெற்றுவிடுவார்களே" என்ற ஒரேயொரு குறுகிய நோக்கிலான கண்காணிப்பை மட்டும் தீவிரமாக மேற்கொண்டு வந்ததால்த் தான் என்பதை உணரமுடியும். மேலும், இந்நாட்டின் உளவுத்துறையினர் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், காணி மீட்பு போராட்டம் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் வகையில் நடைபெறக்கூடிய போராட்டங்களை செய்யும்போது, அவற்றை உண்ணிப்பாக கண்காணித்து, அச்சமூட்டும் பணிகளையும், முன்னாள் போராளிகளை குற்றவாளிகள் ஆக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளையுமே முன்னெடுத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக, அண்மையில் மட்டக்களப்பு, வவுனதீவில் காவற்துறையினர் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் போராளிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனை, இங்கு கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். குறித்த சம்பவத்தில் முதன்மையாக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி க.இராசகுமாரனை (அஜந்தன்), அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க அனுமதிக்காமல் சில வாரங்களுக்கு மேலாக விசாரணை மேற்கொண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஐந்து மாதங்களாக விளக்கமறியலில் வைத்திருந்தனர். ஆனால், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் பெரும் உண்மை வெளிப்பட்டது.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான தற்கொலை குண்டுதாரி ஷஹ்ரான் ஹஷிமின் சாரதி உள்ளிட்ட பயங்கரவாதிகள், "காவற்துறையினரை தாமே படுகொலை செய்ததாகவும், அதுவே, தமது முதலாவது தாக்குதல்" என்றும் ஒப்புக்கொண்டனர். இதனடிப்படையில், போலியாக கைது செய்யப்பட்ட குறித்த போராளி விடுதலை பெற்றிருக்கின்றார்.

எமது, நாட்டின் உளவுத்துறையின் கண்காணிப்பும், விசாரணைகளும் எப்படிப்பட்டது, எதைநோக்கியதாக அமைந்திருந்து என்பதை இந்தவொரு சம்பவத்தின் மூலம் ஊகித்துக் கொள்ளலாம். இதன்மூலம், இதுதான் இந்நாட்டு உளவுத்துறை கற்றுக்கொண்ட நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு உக்தியா எனும் கேள்வி எழுகின்றது. இத்தகைய, ஒரு இனத்திற்கு எதிரான குறுகிய பாதுகாப்பு உக்திமுறைகளில் இருந்து இலங்கை உளவுத்துறை மாற வேண்டும் (மாற்றப்பட வேண்டும்). அப்போதுதான், உளவுத்துறையின் கண்காணிப்பு பலம் பரந்துபட்டதாக விரிவடையும். அதனை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் வரையில் உளவுத்துறையினர் உணர்ந்து கொள்ளவில்லை. அப்படி, கூறுவதைவிட எமது நாட்டுக்குள் இருந்தே சர்வதேச பயங்கரவாதிகள் வெளிப்படுவார்கள் என்று உளவுத்துறையினர் துளி கூட சந்தேகப்படவில்லை. சில, ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இஸ்லாமிய அரசின் பயங்கரவாதிகள் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. அன்று, உளவுத்துறையினர் தமது கண்களை திறந்திருக்க வேண்டும். ஆயினும், அன்றும் அதனை உளவுத்துறையினரும் சரி, அரசும் சரி உதாசினம் செய்தே செயற்பட்டனர். ஏனெனில், தமிழர்கள் மட்டுமே இந்நாட்டில் ஆயுதம் தூக்குவார்கள் எனும் இனவாதச் சிந்தனை அவர்களிடம் இருந்திருக்கலாம்!. உளவுத்துறையினரால், தமிழ் மக்கள் அதிகம் துயரை அனுபவித்துள்ளனர். இருந்தபோதிலும், எமது நாட்டின் மக்கள் அனைவருக்கும் உயிர் அச்சுறுத்தலாக இருக்கும் இப்பயங்கரவாதத்தை அடியோடு அழிக்க உளவுத்துறையினர் பலம்பெற வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

ஆகவே, அரசாங்கம் நடந்தவற்றை மறைக்க முயற்சிப்பதை விடுத்து உளவுத்துறையை பலம்மிக்கதாக மீள்கட்டமைக்க வேண்டும். தமது உரிமைக்காக, நீதிக்காக, இருப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு எதிராக உளவுபார்ப்பதை கைவிட்டு, இந்நாட்டுக்கு வெளியில் இருந்து வந்துள்ள, வரப்போகும் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற இந்த நாட்டின் உளவுத்துறையை, பாதுகாப்புத்துறையை தொழில்நுட்ப வளங்கல்களுடன் சிறப்பாக வழிநடத்த வேண்டும். அப்போதுதான், இந்நாட்டிற்கு இன்று ஏற்பட்டிருக்கும் கொடூரமான சர்வதேசப் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து இச்சிறிய நாட்டை காப்பாற்றி, பயங்கரவாதிகளை அழித்தொழிக்கவும் முடியும். அது, சகல இனங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மலரச் செய்து, அச்சமற்ற சூழ்நிலை நீக்கி, நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் உதவியாக அமையும்!.

07.06.2019
#பிரகாஸ்