முகநூலும் அனாவசிய விமர்சனங்களும்முகநூலில், சமூகத்திற்கு பயன்தரக்கூடிய விடயங்களை பகிர்வதை, ஆக்கபூர்வமான பதிவுகளை எழுதுவதையும், எதிர்க்க வேண்டியதை எதிப்பதையும் விடுத்து தனி நபர்களின் செயற்பாடுகளை இழுத்து அதை விமர்சித்து குளிர்காய்வதே ஒரு பகுதியினருக்கு வேலையாகி விட்டது.

ஒன்று, அண்மையில் வங்கி நிகழ்வு ஒன்றில் பாடலுக்கு சாதாரணமாக நடனமாடிய நடுத்தர வயதுடைய முஸ்லிம் பெண்களை விமர்சித்தனர். நிகழ்வுகளில் ஆடிப்பாடுவது என்பது அனைவரும் பொதுவாக இயல்பாக செய்வது தான் அதில் எந்த முகம்சுழிக்கும் ஆபாசமும் இருக்காதவிடத்து அதனை மோசமான செயல்பாடாக கருதி பெரிதாக்குவது பிழையான செயலாகும்.

இரண்டு, தற்போது பிசினஸ் பாடசாலை நிகழ்வு ஒன்றில் பலூனை வைத்து நடனமாடிய முஸ்லிம் பெண் ஒருவரை ஆபாச நடிகைகளுடன் இணைத்து விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். குறித்த நிகழ்வில் ஆண் - பெண், பெண் - பெண் என பலரும் பலூன்களை தமக்கிடையில் வைத்து நடனமாடினர். அதில் மேல்குறித்த பெண் ஆணுடன் அவ்வாறு நடனமாடிய புகைப்படங்ளையும் பலூன் அவரது மார்புக்கு மேல் நிற்பதையும் வைத்துக்கு கொண்டு கேவலமாகவும் ஆபாசமாகவும் விமர்சிக்கின்றனர்.

பொது நிகழ்வில் ஒரு பெண் ஆணுடன் இ்ப்படியான நடனமாடுவது சிலருக்கு சரியாக இருக்கலாம், சிலருக்கு பிழையாக இருக்கலாம் ஆனால் அடுத்தவரின் ஒழுக்கக்கேடற்ற சுயஉரிமைகளை நாம் தடுக்க முடியாது என்பதுடன் குறித்த நிகழ்வில் பலர் அவ்வாறு நடனமாடியபோது தனி ஒரு பெண்ணை மட்டும். அவள் தான் பலூனை வைத்து ஆடியது போல் விமர்சிப்பது வெறும் மடைத்தனமான சிந்தனையாகும்.

குறித்த இரண்டு விடயத்திலும் முஸ்லிம் பெண்கள் மீதான எதிர்ப்பு விமர்சனம் ஒரு பகுதி முஸ்லிம்களினால் தான் ஆரம்பிக்கப்பட்டது அதனை பார்த்து பலரும் ஒழுக்கக்கேடான செயல் போல் பேசுபொருளாக்கி கொதிப்படைகின்றனர்.

இவற்றை வைத்து பார்க்கும் போது அதிகம் பேசிப் பேசுபொருளாக்கப்பட வேண்டிய சமூகத்திற்கு அவசியமான விடயங்களை தவிர்த்து தனிநபர் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஏதாவது சிக்குமா என காத்திருந்து அதனை வைத்து ஒரு வாரத்திற்கு விமர்சித்தும், நையாண்டி செய்தும் தமது இருப்பை காட்டுவதே முகநூலில் இருக்கும் ஒரு பகுதியினரின் நோக்கமாக காணப்படுகிறது.

கடந்த 3 வருடங்களுக்கு முன் ஒரு இசை நிகழ்ச்சியில் போதையில் மார்பு கச்சைகளை கழட்டி வீசி பெண்கள் ஆடினர் என்பதை சுட்டிக்காட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை ஏற்பாடு செய்தவர்களை திருக்கை வாலால் அடிக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்திருந்தார். உண்மையில் நாம் விமர்சித்து சமூகத்தை திருத்த வேண்டியது அது போன்ற ஆபாசமான மற்றும் முகம் சுழிக்கும் மோசமான கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்தும் நிகழ்ச்சிளை தான் ஆனால் நாம் இன்று தனிநபர்களின் ஒழுக்க சீர்கேடற்ற விடயங்களை விமர்சித்து வருகிறோம்.

அடுத்தவரின் செயலில் தவறு காணும் நாங்களும் தவறு செய்திருப்போம் இதில் நான் உட்பட யாரும் விதிவிலக்கல்ல. சமூகத்தில் அருவருப்பை ஏற்படுத்தும் வகையில் கலாசாரங்களை அழிப்பவர்கள் மற்றும் மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளை நோக்கியும், பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும் உங்கள் விமர்சனத்தை முன் வையுங்கள். தம் இன பெண்கள் தொர்பில் தேவையற்ற விடயங்களை காவிக்கொண்டு இப்படியான விமர்சன வைரலை ஏற்படுத்துபவர்கள் சிந்திக்க வேண்டும்.

24/04/2018
#பிரகாஸ்

Comments

Popular posts from this blog

"கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிக்கும் மின்னல்"

"பயங்கரவாதச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக திரும்பும் போது மகிழ முடியுமா?"

"இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தின் தாக்கம் தமிழரை பாதிக்குமா?"