முதுகெலும்பு தேய உழைத்தும் உரிய சம்பளம் இல்லை - ஞா.பிரகாஸ் (ஊடகவியலாளர்)

Search This Blog

Wednesday, May 2, 2018

முதுகெலும்பு தேய உழைத்தும் உரிய சம்பளம் இல்லை


லங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் முதுகெலும்பாக இருந்து 150 வருடங்களுக்கும் மேலாக மலையக மக்கள் தமது முதுகெலும்பு தேய உழைத்தாலும் உரிய சம்பளம் முதல் அடிப்படை தேவை, உரிமை மற்றும் சுதந்திரம் என எதுவுமே இற்றைவரையில் முழுமையாக கிடைக்காத நிலையிலேயே கடும் பொருளாதார நெருக்கடியில் உழைத்து வருகின்றனர்.

அரசியல்வாதிகளின் வாக்குறுதியான 1000 ரூபாய் சம்பள உயர்வை கோரி இரு வருடங்களுக்கு முன் 25 நாட்கள் வரையில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு வெறும் 110 ரூபாய் சம்பள அதிகரிப்புடன் 730 ரூபாய் சம்பளம் வழங்குவதாக தினிப்பு முறையில் கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் கைச்சாத்திட்டது ஆனால் ஒரு வருடம் கூட்டு ஒப்பந்தம் செய்யப்படாத காலப்பகுதிக்கான நிலுவை சம்பளம் எதுவும் இதுவரை தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.

இந்த 730 ரூபாய் சம்பளத்தை வழங்க நாள் ஒன்றிற்கு 18 கிலோ கொழுந்து பறிக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர் அதற்கு குறைவாக கொழுந்து பறித்தால் முழுமையான சம்பளம் வழங்க மறுக்கப்படுகிறது இதற்கு எதிராக பல தோட்டங்களை சேர்ந்த மக்கள் அண்மைய காலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தீர்வில்லை.

இதேபோல் சந்தா என்ற பெயரில் சிறு தொகையாக அவ் மக்களின் ஊதியம் தோட்ட கம்பனிகளினால் சூறையாடப்படுகிறது மற்றும் 7 பேர்ச் காணி வழங்கி வீடமைக்க வழங்கப்பட்ட கடண் நிதிக்கு மேலாக கடணை தொழிலாளர் குடும்பங்கள் செலுத்தியும் அதனை தோட்ட கம்பனிகள் சுறண்டிக்கொள்வாதால் கடண் செலுத்தவில்லை என வீடமைப்பு அதிகார சபையால் மக்களுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது.

வேலை நாட்களில் முக்கியமான வேளைகளில் ஆலயத்திற்கு செல்ல அரை நாள் விடுமுறை வழங்க மனுமதி மறுக்கப்படுகிறது, தோட்ட முகாமையாளர்களை எதிர்த்தால் வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர், சலுகைள் மறுக்கப்படுகிறது இவற்றுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு பல பிரச்சனைகளுடன் இன்னமும் சொந்த வீடு, சொந்த காணிகள் போன்ற அடிப்படை தேவைகளும் கிடைக்கப்பெறாமல் வறுமையுடன் உழைத்து நாட்டையும் முதலாளிகளையும் வளர்சியடைய வைத்துக்கொண்டு உரிமைகளுக்காக காலம் காலமாக போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேல் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்காக தினம் ஒரு தோட்டத்திலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றனர் ஆனால் இவற்றை தீர்க்க, அநீதிகளை வெளிக்காட்ட மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அரசியல்வாதிகள் அவற்றை கண்டுகொள்ளவதில்லை.

மலையக மக்களை தோட்ட கம்பனிகளுக்கு அடுத்தபடியாக ஏமாற்றி உழைப்பை சுறண்டும் இரண்டாம் தரப்பாக மலையக அரசியல்வாதிகளே காணப்படுகின்றனர். வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை போன்றே மலையக அரசியல்வாதிகளும் நாடாளுமன்றில் இந்த மக்களின் ஒவ்வொரு பிரச்சனைகளையும் பேசாமால் மௌனம் காத்து வருகின்றனர்.

ஆனால் தொழிலாளர் தினம் வந்தவுடன் பிரமாண்ட மேடைகளை அமைத்து தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று ஒவ்வொரு கட்சிகளும் தமது சுயலாப அரசியலை மட்டும் திறம்பட செய்துமுடிப்பார்கள் ஆனால் அவர்களின் பிரச்சனைகளை மேடையிலும் பேசமாட்டார்கள் அரசிடமும் கொண்டு செல்ல மாட்டார்கள்.

01/05/2018
#பிரகாஸ்