ஞா.பிரகாஸ் (ஊடகவியலாளர்)

ஞா.பிரகாஸ் (ஊடகவியலாளர்)

Search This Blog

Tuesday, September 17, 2019

எனக்குள்ளும் கனவு ஊற்றெடுத்த தருணம்

September 17, 2019
சுயாதீன ஊடகவியலாளர் ஞா.பிரகாஸ் உடன் ஓர் நேர்காணல்

1. உங்கள் அடையாளம் என்ன என கேட்டால் என்ன சொல்வீர்கள் ?.

பதில் :- எழுத்து என்று தான் சொல்வேன். அதற்கான அடித்தளத்தினை முகநூல் வலைத்தளமே ஏற்படுத்தித்தந்தது. ஏனென்றால், முகநூல் பயனராகிய பின்னரே எனக்குள் இருந்த எழுத்துத்திறமை வெளிப்பட்டது. அது, ஊடகவியலாளர் எனும் அந்தஸ்த்தையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

2. உங்கள் குடும்பம், பிறந்த, வளர்ந்த ஊர் பற்றி ஒரு அறிமுகம்.

பதில் :- அம்மா, அப்பாவுடன், அக்கா மற்றும் இரண்டு அண்ணன்கள் அடங்கலாக ஆறு பேரை கொண்டது எங்கள் குடும்பம். அதில், நான் கடைக்குட்டி. பிறந்தது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொடிகாமம், வெள்ளாம் போக்கட்டி எனும் பனை, தென்னை, மா மரங்கள் நிறைந்த அழகிய கிராமத்தில் தான். வளர்ந்ததும் இதே கிராமத்திலேயே. எனினும், சிறு வயதில் போர்ச் சூல்நிலைகளின் போது உறவினர்கள் உள்ள ஊர்களான பண்டத்தரிப்பு மற்றும் உரும்பிராயிலும் சில காலம் வாழ்ந்துள்ளேன்.

3. உங்களுக்கு இந்த ஊடக துறையில் சாதிக்க தூண்டிய காரணி எது ?.

பதில் :- பத்திரிகை, வானொலிகள் மீது மிகுந்த ஆர்வமும், செய்திகளை படிப்பதில் இருந்த ஈர்ப்பும் ஒரு காரணியாக இருக்கின்றது. அதேபோல், "ஊடகவியலாளன்" என்ற அடையாளத்தை நானாக சூட்டிக்கொண்டதால் அதனை முழுமையாக நிரூபிக்க வேண்டும் என்ற உந்துதலும் முக்கியமான காரணியாகும். அந்தவகையில் தற்போது தான் ஊடகத் துறையில் இலை மறை காயாக இருந்து சாதிக்க ஆரம்பித்துள்ளேன்.

4. உங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் இது போன்று சாதிக்க உங்கள் ஒரு குடும்பம் என்ற வகையில் என்ன மாதிரியான பங்களிப்பை செய்கிறது அல்லது செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள் ?.

பதில் :- எனது தேவையறிந்து செயற்படுவதுடன், தேவையான பங்களிப்பை எனது குடும்பத்தினர் செய்துவருகின்றனர். அம்மா இல்லை என்றால் என்னால் எதுவும் சாதித்திருக்க முடியாது. மக்களுக்கான போராட்டங்களில் கலந்து கொள்ள அம்மா என்னை தயார்ப் படுத்துவார். அப்பாவே, அழைத்து செல்வார். அது பெற்றோரின் அளப்பரிய பங்களிப்பாகும். அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தொடர்பில் நீதி கோரிய போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்து அதில் பங்குகொள்ள சென்ற என்னைப்பற்றிய தகவல் புலனாய்வாளர்களுக்கு சென்றிருந்தது. ஆனாலும், அச்சம் இருந்தும் எனது குடும்பத்தினர் என்னை தடுக்கவில்லை. எனவே, அத்தகைய பங்களிப்பை தொடர்ந்தும் செய்ய வேண்டும். செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

5. சமூக ஊடகங்கள் குறிப்பாக முகநூல், இணையத்தளம் என்பன உங்களுக்கு எவ்வளவு பெரிய உதவியாக உள்ளது ?.

பதில் :- மேற்குறிப்பிடப்பட்டவை நிறைவேறவும், இப்போது இந்த பேட்டியை வழங்கும் நிலையை அடையவும் முகநூல் வலைத்தளம் மட்டுமே எனக்கு முழுமையான பேருதவியாக அமைந்துள்ளது. முகநூல் இல்லை என்றால் நிச்சயம் எனக்குள் இருந்த திறமை வெளிப்படாமல் வீணாகிப் போயிருக்கும். பலரும் முகநூல் பாதிப்பை மட்டுமே தரும் என்று கருதுகின்றனர். ஆனால் எனக்கு ஒரு எதிர்காலத்தை தந்தது என்றால் அது முகநூல் தான். அத்துடன், என்னால் முடியாது என நினைத்தவற்றை முடியும் என்று தன்னம்பிக்கையை விதைக்கும் சிறந்த நண்பர்களையும் இந்த முகநூல் தந்துள்ளது. 

6. உங்கள் கனவு என்ன ?.

பதில் :- சில காலங்களுக்கு முன்வரை எந்த கனவுகளும் இல்லாமல் தான் இருந்தேன். ஆயினும், மாற்றுத்திறனாளியாக இருப்பவர்கள் தம்மிடம் இருக்கும் திறமைகளை கொண்டு சாதித்துவிட்டு மரணித்து போவதை, முக்கியமாக என்னைப்போல் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்பட்ட அழுத்கமை இர்பான் ஹபிஸ் படுக்கையில் இருந்து மூன்று நூல்களை எழுதிவிட்டு எழுத்தாளராக மரணித்த போது தான். "நானும் மாற்றுத்திறனாளி" என்பதை உலகிற்கு வெளிக்காட்டி என்னிடம் இருக்கும் ஊடகத்திறமை மூலம் சாதித்து மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் முன்னுதாரணமாக, தன்னம்பிக்கையை கொடுப்பவனாக இருந்துவிட்டு மரணித்துவிட வேண்டும் என்பதே கனவாக மாறியது அல்லது மாற்றிக்கொண்டேன். அந்தக் கனவை ஒரு போராட்டத்தில் பங்கெடுத்து செயற்படுத்த ஆரம்பித்திருக்கிறேன்.

7. உங்கள் ஊடக செயல்பாடுகளை தடையின்றி செய்ய ஏதாவது தடைகள் உள்ளனவா ?.

பதில் :- தடை இருப்பதாக நான் உணரவில்லை. ஆயினும், ஊடகவியலாளர் என்ற உத்தியோகபூர்வ அந்தஸ்த்து எனக்கு கிடைக்கவில்லை. அதற்காக, நான் இதுவரை விண்ணப்பிக்கவும் இல்லை. அந்த அந்தஸ்த்தை பெற்றுக் கொண்டால் எனது ஊடகத்துறை பயணத்திற்கு வலு கிடைக்கும்.

8. எப்போதாவது உங்களது உடல் அங்கவீனம் குறித்து வருத்தப்பட்டிருக்கிறீர்களா ?.

பதில் :- ஆம்!. மனதுக்குள் வருத்தப்பட்டிருக்கிறேன் வெளியில் காட்டிக்கொள்வதில்லை. அத்தகைய கவலை எப்போதும் என் மனதோரத்தில் இருக்கும். சகோதரர்கள் மூவர் இருந்தாலும் பெற்றோர் இல்லாத எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தால் அல்லது விரைவில் மரணித்துவிடுவேன் என்பதை நினைக்கும் போது கவலையுடன் இலேசாக கண்கள் நனைந்துவிடும்.

9. இன்று சமூகத்தில் ஒரு மாற்றுத்திறனாளியாக பல சாதனைகளை முன்னெடுத்து வருகிறீர்கள்.. உங்களைப் போன்றவர்கள் மேலும் என்னென்ன துறைகளில் சாதிக்கலாம் முன்னேறலாம் ?.

பதில் :- என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் தமக்குள் இருக்கும் திறமைகளின் அடிப்படையில் எத்துறையிலும் சாதிக்க முடியும். எனவே, மாற்றுத் திறனாளிகளாக இருப்பவர்கள் தமக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு ஏதோவொரு வழியில் அவற்றில் சாதித்து முன்னேற வேண்டும். என்னைப் போல் தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட தம் பிள்ளைகளை கேள்விப்படும் வைத்தியர்களிடம் எல்லாம் கொண்டுதிரிந்து அல்லல்ப்பட்டு பிள்ளைகளையும் கஸ்டப்படுத்தாமல் அவர்களது திறமையை வளர்க்க பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.

10. உங்களுக்கு வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் துறை எது ?.

பதில் :- இப்போது வருமானத்தை பெற்றுத்தருவது ஊடகத்துறை தான். இணைய ஊடகங்களில் செய்தி ஆசிரியராகவும், செய்தியாளராகவும் பணிபுரிகின்றேன். இந்நிலையை அடைவதற்கு முந்தைய காலத்தில் கதிரை பின்னுவது, நீத்துப்பெட்டி பின்னல் மற்றும் புகைப்பட வடிவமைப்பு செய்வது மூலமும் வருமானத்தை பெற்றுள்ளேன் என்பதையும் இவ்விடத்தில் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

11. நீங்கள் முழு நேர ஊடகவியலாளர் மட்டுமா அல்லது ஏனைய படைப்புகளில் ஆர்வம் உண்டா ?.

பதில் :- முழுநேர ஊடகவியலாளர் என்று தான் சொல்ல வேண்டும். புகைப்பட வடிவமைப்பு துறையில் ஆர்வம் இருந்தாலும் எனது உடல் நிலைக்கு ஏற்ப முழு நேரத்தையும் ஊடகத் துறையில் செலவிடுவதே எனக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.

12. பொதுவாக சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?.

பதில் :- சமூகம் என்ற கட்டமைப்பின் கீழ் வாழுகின்ற மக்களிடையில் ஒற்றுமை, மனிதநேயம் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். ஆனால், அனைத்தும் நவீனமயமாக மாறிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அவை அருகியிருப்பதையே காண்கின்றோம். சாமானிய மக்களின் பிரச்சினைகள், வறுமைகளை போக்குவதற்கு கரம்கொடுப்பது ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்கள் பல்வேறு துண்பகரமான பிரச்சினைகளுக்காக அரசிடம் கோரிக்கை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றில், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகள், பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமானவை. அதுபோன்ற, பிரச்சினைகளை தீர்க்க பாதிக்கப்பட்டோருக்காக குரல் கொடுக்கும் ஒற்றுமை மனப்பாங்கு அனைத்து மக்களிடமும் ஏற்பட வேண்டும்மென்று பணிவுடன் வலியுறுத்த விரும்புகின்றேன். மாற்றுத்திறனாளியாக இருந்தும் ஏன் இதற்கு முக்கியம் கொடுக்கிறீர்கள் என்று உங்களிடம் கேள்வி எழுமென்று நினைக்கின்றேன். எனது ஊடகத்துறை வளர்ச்சிக்கும் என்னை மாற்றுத்திறனாளியாக பொது வெளியில் அடையாளப்படுத்தவும் மக்களின் பிரச்சினை (முக்கியமாக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினை) எனக்கு தூண்டுகோலாக இருந்தது என்பதுதான் அதற்கான விடை.

16.09.2019
மித்திரன் வாரமலரின் நேர்காணல் - நேர்கண்டவர் ப.கனகேஸ்வரன் (கேஜி)
Read More

Wednesday, August 14, 2019

ஜிஆர் எனும் நிழல் அச்சம்!

August 14, 2019
மீண்டுமொரு முறை இந்நாடு ஜனநாயகம் அற்ற பாதையின் வழியே பயணிப்பதற்கு உரிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விடக்கூடுமோ எனும் அச்சத்தை தாமரை மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு சுட்டி நிற்கின்றது. இது ஒவ்வொரு சிறுபான்மை மக்களின் மனங்களிலும் - நீதியின் பக்கம் பக்கம் நிற்பவர்களின் மனங்களிலும் ஒருவித பயத்தை நிச்சயம் ஏற்படுத்தி விட்டிருக்கும்.

கோத்தாபய (ஜிஆர் - GR) ஜனாதிபதி வேட்பாளராக களம் கண்டிருப்பது அதிகப்படியான பெரும்பான்மை மக்களுக்கு எதிர்பார்ப்பு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதைவிட இரட்டிப்பாக தமிழ் மக்களிடையில் கவலை தொற்றிக் கொண்டிருக்கும். இல்லை - அதனை உணர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டோம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

எனவே ஒருவேளை கோத்தாபய வெற்றி பெற்று விட்டால் நிச்சயம் அது தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்கும் காலமாகவே அமையும். மஹிந்தவின் ஆட்சியில், கோத்தாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி போராட முடியாத நிலை ஏற்படும். அது தொடர்பிலான வழக்குகள் காணாமல் ஆக்கப்படும். அதுபோல், இப்போது நடை பெறும் பௌத்த மயமாக்கலுக்கான எதிர்ப்பை காண்பிக்க முடியாமல்ப் போகும். இராணுவத்தின் காணி அபகரிப்புக்களை எதிர்த்து நிக்க முடியாது. இப்போதிருக்கும் இந்த உரிமைகள் நிச்சயம் பறிக்கப்படும்.

ஏனெனில் இந்த ஆட்சியில் இத்தகைய உரிமைகளை நாம் இழக்கவில்லை என்றாலும் செயற்பாட்டாளர்கள் -பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தலைச் சந்தித்தனர். நீதி கிடைக்கும் என்று நம்பி அநீதிகளினால் ஏமாற்றமடைந்தோம். எனவே கோத்தாபய ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் தலைகீழாக மாறிவிடும். அதற்கு தமிழ் மக்கள் ஆகிய நாம் துணைபோய் விடாமல் இருப்பதே ஆகச் சிறந்த முடிவாகும். ஆனால் அது நடக்குமா? நடக்காதா? என்பது தமிழ் மக்களின் கைகளில் மட்டுமல்ல நீதியின் பக்கம் நிற்கும் சிங்கள மக்களின் கைகளிலும் தங்கி இருக்கின்றது.

சண்டே ஒப்சேவரில் இன்று வெளியான ஆங்கிலக் கட்டுரையின் ஒரு பகுதியில் கட்டுரையாளர் சரத் டி அல்விஸ் "கோத்தாபயவின் வளர்ச்சி; அரசியல் உயரடுக்கினை மக்கள் நிராகரித்ததன் விளைவாகும். ஜனநாயகம் இறந்து சர்வாதிகாரிகள் உருவாக்கப்படுவது அப்படித்தான். ஜனநாயகம் இறந்துவிடுகிறது; சர்வாதிகாரிகள் பெரும்பான்மையின் ஒப்புதலால் பிறக்கிறார்கள்" இவ்வாறு சிறந்தவொரு கருத்தை முன்வைத்திருந்தார்.

இப்போதிருக்கும் அரசாங்கம் சரியாகச் செயற்பட்டு தாம் 'ஆட்சிக்கு வரும் போது' வழங்கிய அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, மக்கள் மனங்களை வெற்றி கொண்டு இனவாதம், உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதம் ஆகியவற்றை தலைதூக்க விடாமல் நாட்டைப் பாதுகாத்திருக்குமாக இருந்தால், கோத்தாபய எனும் நிழல் அச்சம் இன்று எழுந்திருக்காது. சரத் டி அல்விஸ் கூறியது போல் சர்வாதிகாரிகளை பிறப்பெடுக்கச் செய்யக் கூடிய பெரும்பான்மை ஒப்புதல் வலுப்பெற்றிருக்காது!.

11.08.2019
#பிரகாஸ்
Read More

Friday, June 28, 2019

மரண தண்டனை

June 28, 2019


அண்மைக்காலம் முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையை நிறைவேற்றியே தீருவேன் என்று கூறிக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

தீவிர பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருட்களை இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்து இளைய சமுதாயத்தை அழிக்கும் கயவர்களான போதைப் பொருள் கடத்தல்காரர்களை தூக்கிலிட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், இலங்கையின் சட்டம் காணப்படும் நிலையை பார்த்தால் தற்போது மரண தண்டனையை நிறைவேற்றவேது பொருத்தமற்றதாகவே இருக்கும்.

ஆரம்பத்தில், போதைப் பொருள் தொடர்பிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி கூறியபோது சரியான முடிவு என்றே கருதினேன். எனினும், எனது நண்பர் ஒருவர் "சட்டம் மற்றும் நீதித்துறை சரியாக இல்லாத நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றுவதை அனுமதிக்க முடியாது" எனக்கூறினார். அவரது கூற்றுப்படி சிந்தித்தபோது அது சரிதான் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இலங்கையின் நீதித்துறை எத்தகைய நிலையில் இருக்கின்றது என்பதை தமிழர்களுக்கு கிடைக்கப்பெறாத நீதியைவைத்து, காவல்த்துறையினரின் செய்பாடுகளை வைத்தும், நாம் முடிவுகட்டிவிடலாம். அவ்வாறானதொரு நிலையில் மரண தண்டனையை நிறைவேற்றுவார்களாயின் பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்களை தவிர்த்து சிறியளவிலான கடத்தல்களில் ஈடுபட்டவர்களை தூக்கிலிட்டு நாட்டு மக்களை ஏமாற்றும் நிலமையும் ஏற்படக்கூடும்.

முழுமையாக வழக்கு முடிவுறுத்தப்பட்ட நிலையில் மரண தண்டனை கைதிகளாக உள்ள போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 21 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அதில், தமிழர்கள் சிலரும் உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியது. அத்துடன், மிக முக்கியமான பிரதான போதைப் பொருள் கடத்தல்காரர்களின் பெயர்கள் வழக்கு முழுமையாக நிறைவுற்றிராத காரணத்தினால் இடம்பெறவில்லை.

அவ்வாறானதொரு நிலையில், பாரிய போதைப் பொருள் கடத்தல் மன்னர்களை விடுத்து, சிறிய கடத்தல்காரர்களை தண்டிப்பதால் போதைப் பொருள் கடத்தலை அல்லது வியாபாரத்தை குறைத்துவிட முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே, தற்போது மரண தண்டனை நிறைவேற்றுவதை தவிர்த்து, சட்டம் மற்றும் நீதித்துறையை முழுமையாக சுயாதீனமாக இயங்கும் வகையில் சீரமைத்து (Reform) அதன்பின்னர் மரண தண்டனையை நிறைவேற்றுவதே சிறந்ததாக - நியாயமானதாக அமையும்.

சிறையிலுள்ள போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சிறையில் இருந்தவாறே போதைப் பொருள் கடத்தல்களை செய்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகளே காரணமாக அமைக்கின்றனர் (சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லத்தீப் ஒருமுறை இதனை ஏற்றுக் கொண்டிருந்தார்). சிறைச்சாலை அதிகாரிகளின் உதவி கிடைக்காவிட்டால் அவர்களினால் எதுவும் செய்யமுடியாது. அத்தகைய சூல்நிலையை உருவாக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஆனால், மரண தண்டனையை நிறைவேற்றினால் போதைப் பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி எண்ணுகிறாரோ தெரியவில்லை. உதவி புரிபவர்கள் இருக்கும் வரையில் போதைப் பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்திவிட முடியாது என்பதே உண்மை. ஜனாதிபதி, மரண தண்டனையை நிறைவேற்றினால் சாதாரண போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மட்டுமே அச்சம் கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

இது, இவ்வாறு இருக்கட்டும் ஆனால்,

வன்புணர்வு கொலைகளை புரிந்தவர்களுக்கு இப்போது மரண தண்டனை நிறைவேற்றினால் கூட அதனை ஏற்றுக்கொள்ள முடியும். அதில், சிலவேளைகளில் அப்பாவிகள் சிக்கிக்கொள்ள கூடிய நிலை ஒன்று காணப்பட்டாலும், பாரிய குற்றம், சிறிய குற்றம் என்று பாகுபாடு பார்க்கும் அவசியம் கிடையாது. எனவே, அவ்வாறான குற்றவாளிகளுக்கு இப்போதும் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும். ஆனால், அதனை ஜனாதிபதி செய்யவில்லை. செய்யத் தயாராகவும் இல்லை.

23.02.2019
#பிரகாஸ்
Read More

Sunday, June 16, 2019

இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதம்; உளவுத்துறையின் வீழ்ச்சி

June 16, 2019
ஒரு நாட்டினுடைய அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத்துறை தனது நாட்டையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக தேசிய பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக கவனம் கொண்டிருக்க வேண்டியது மிக முக்கிய பொறுப்பாகும். அதிலும், குறிப்பாக மக்களை அழிக்கும் பயங்கரவாதச் சக்திகள் நாட்டுக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதிலும் மிகத் தீவிரமாகவிருக்க வேண்டும். ஆனால், எமது நாட்டில் அது முழுமையாக தோற்றுப் போயிருக்கின்றது. அத்தோல்வி, இன்று எங்கள் நாட்டு மக்களின் உயிரையும், சர்வதேச மக்களின் உயிரையும் பறித்து, இரத்தத்தின் சுவையைச் சுவைக்க வல்லூறுகள் போல்க்காத்திருந்த பயங்கரவாதிகளின் கொடூரமான இரத்த வெறியாட்டத்திற்கு வித்திட்டிருக்கின்றது. இலங்கையில் பேரினவாதிகளினால் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக அன்று தமிழர்கள் ஆயுதம் தூக்கினார்கள். இதன், காரணமாக நாட்டில் 30-ஆண்டு காலம் கொடியயுத்தம் நடைபெற்றது. அவ்யுத்தம், 18.05.2009 அன்று முள்ளிவாய்காலில் முடிவுக்குவந்தது. யுத்தத்தின் போது, பல்லாயிரக் கணக்கிலான தமிழ் மக்கள் அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர், சிங்கள, முஸ்லிம் இளைஞர்கள் உட்பட தமிழர்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர், யுத்தத்தின் இறுதிநாளில் சரணடைந்தவர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர். யுத்தம் முடிவுக்குவந்து 10-ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இவற்றிற்க்கு நீதிகேட்டு தமிழ் மக்கள் பெரும் துயரங்களுடன் பல்வேறு, அச்சங்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், இந்நாடு 30-ஆண்டுகால யுத்தத்தின்போது காணப்பட்ட நிலைமைகளையும் விடப்பெரும் அபாயகரமான பாதாளக்குழிக்குள் வீழ்த்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மக்களினால் இயேசு உயிர்ப்பு விழாவாக கொண்டாடப்படும் உயிர்த்த ஞாயிறு தினமான 21.05.2019 அன்று இச்சிறிய நாட்டை பாதாளக்குழிக்குள் தள்ளிவிட்ட அதிபயங்கரமான தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டது. சிரியா மற்றும் ஈராக்கின் இஸ்லாமிய அரசு (ISIS) என்று அடையாளப்படுத்தப்பட்டு, 2014ம் ஆண்டு முதல் தம்மை உலக இயக்கமாக பிரகடனம் செய்து இஸ்லாமிய அரசு (IS) என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதிகள், இலங்கையில் இயங்கிய தேசிய தௌஹீத் ஜமாஅத் என்னும் அமைப்பை தம்முடன் இணைத்துக்கொண்டு ஒரேநேரத்தில் 3 தேவாலயங்கள், 3 ஹோட்டல்கள் மற்றும் 2 இடங்களில் இரத்தவெறிப் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில், 16 சர்வதேச நாடுகளை சேர்ந்த 40 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் உட்பட 258 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இவ், இரத்த வெறியாட்டம் இலங்கையை மட்டுமல்லாமல் அத்தனை சர்வதேச நாடுகளையும் உலுக்கியெடுத்த ஒன்றாக மாறியிருக்கின்றது.

இலங்கையில் கடும்போக்குக் கொள்கை உடையவர்களாக இருந்த, இப்போது அரசினால் தடை செய்யப்படிருக்கும் இஸ்லாமிய அமைப்புக்களை மூலைச்சலைவைக்கு உட்படுத்தி சொந்த நாட்டு மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கொடிய சர்வதேச பயங்கரவாதத்தின் நுழைவும் தாக்குதலும் இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம், இனங்களுக்கிடையில் இதுவரை இருந்த ஒற்றுமை, மக்கள் இடையில் காணப்பட்ட அச்சமற்ற சூழ்நிலை. இவை, அனைத்தையும் ஒரேநாளில் உடைத்தெறிந்திருக்கிறது. இந்நிலைக்கு, தீவிரவாதிகளாக மாறிய - மாற்றப்பட்ட இலங்கை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் மட்டுமல்லாது அரசாங்கம் மற்றும் அதனுடைய பாதுகாப்புத்துறையும் பெரும்காரணமாகும். இத்தாக்குதல்களை, தடுத்து நிறுத்துவதற்குரிய, தாக்குதல் திட்டங்களை முறியடிக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்டும் அவற்றையெல்லாம் பாதுகாப்புத்துறையினரும், பாதுகாப்பு அமைச்சும் கண்டும், காணாதது போலவும், அவற்றை சாத்தியமற்றவை எனக்கருதியும், கடந்த 30-ஆண்டு காலமாக எவர்களை நோக்கி தமது உளவுத்துறை பணிகளை செய்தார்களோ, அதையேதான் இறுதிப்போர் நிறைவுற்றிருந்த கடந்த 10-ஆண்டு காலமாகவும் தொடர்ந்து கொண்டிருந்தனர். இதுபோக, இறுதியாக, பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டங்கள் குறித்து இந்திய உளவுத்துறையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதுவும், மேற்குறிப்பிட்ட காரணங்களினால் உதறித்தள்ளப்பட்டது. இதனால், இவை பயங்கரவாதிகளின் அகோர வளர்ச்சிக்கும், சுதந்திரமான தாக்குதலுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது போல் அமைந்துவிட்டது.

குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னர் அரசாங்கம் மூன்று இஸ்லாமிய தீவிரவாத போக்குடைய அமைப்புக்களை தடை செய்திருந்தது. அதில், "தேசிய தௌஹீத் ஜமாஅத்" பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னெடுப்பதில் முக்கியபங்காற்றிய அமைப்பாகும். அவ்வமைப்பின், செயற்பாடுகளை சில ஆண்டுகளுக்கு முன்னர் காத்தான்குடியைச் சேர்ந்த குறிப்பிட்டளவிலான இஸ்லாமிய மக்கள் வெளிச்சம்போட்டுக் காட்டிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அப்போதும், உளவுத்துறையினர் விழித்துக் கொள்ளவில்லை. 13.03.2017 அன்று, தேசிய தௌஹீத் ஜமாஅத் என்பது பயங்கரவாத அமைப்பு, அதன் தலைவராக இருந்த ஷஹ்ரான் ஹஷிம் (உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களின் தலைவன் என்று கூறப்பட்டிருப்பவர்) பயங்கரவாதி என்பதை அம்மக்கள் வெளிப்படுத்தினர். அன்றைய தினம் "ஷஹ்ரான் சாத்தானை கைது செய், நல்லாட்சியில் ஆயுதக் கலாசாரத்தை உட்புகுத்தாதே" போன்ற பதாகைகளுடன், அடிப்படைவாதத்தை தூண்டும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து அப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த, போராட்டமானது தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினால் நிகழ்த்தப்பட்ட வாள்வெட்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியிலேயே இடம்பெற்றது. அதன்மூலம், பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரி ஷஹ்ரான் ஹஷிமின் உண்மை நிலை வெளிப்பட்டிருந்தது. ஆயினும், இவை, இஸ்லாமிய அமைப்பக்களுக்கு இடையிலான மதக் கொள்கை முரண்பாடுகளுக்குள் மழுங்கடிக்கப்பட்டது. அரசு மற்றும் உளவுத்துறையும் அவையனைத்தையும் சந்தேகக்கண் கொண்டுபாராமல், அவற்றை மத முரண்பாடு எனும் கோணத்தில் சாதாரணமாக உதறித்தள்ளிவிட்டிருந்தனர். இங்கு, தான் உளவுத்துறையின் முதலாவது வீழ்ச்சி தொடங்கியது. இவர்களைப், போலவே, அன்று, இவை தொடர்பில் கள்ள மௌனம் சாதித்த இஸ்லாமிய மக்களின் அரசியல் பிரதிநிதிகள், இன்று, ஆர்ப்பாட்டத்தின் புகைப்படப் பிரதிகளை, படப்பிரதி (Photocopy) செய்து ஊடக சந்திப்புக்களில் அதனை காண்பித்து, தாம் மௌனமாக இருந்ததை மறந்துவிட்டு தம்பட்டம் அடிக்க முயற்சிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இதேபோல், 07.03.2018 அன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இருக்கக்கூடிய ஆரயம்பதி பகுதியில் இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகளின் பெயரை தாங்கிய சுலோக அட்டையுடன் வெடி பொருட்கள் சில மீட்கப்பட்டது. அச்சம்பவத்தினை கூட இந்நாட்டு உளவுத்துறை கவனத்தில் கொள்ளவில்லை. அது, கண்டிக்கலவரம் நடந்து கொண்டிருந்தகாலம் என்பதால் அச்சம்பவம் இனவாதத்தின் பெயரினால், இனவாதச் சதிகள் காரணமாக இருக்கலாம் எனும் போக்கில் புதைந்துபோனது. ஆனால், இன்று இதனையும் மீளாய்விற்கு உட்படுத்திப்பார்த்தால் அதனுள் மறைந்திருந்த பாரிய உண்மைகள் மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது. இது, உளவுத்துறையின் இரண்டாவது வீழ்ச்சியாகும். இவ்விரு, விடயங்களிலும் உளவுத்துறையினர், காவற்துறையினர் உட்பட அரசாங்கப் பாதுகாப்புத்துறை பாரிய கண்காணிப்பு தவறை செய்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது, பயங்கரவாதிகளை நெருங்கக்கூடிய சம்பவங்கள் பல நடந்தும் அவற்றை வேறுபல கோணங்களில் நோக்கி, உரிய உளவு விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியிருக்கின்றனர். அது, பயங்கரவாதிகளின் வளரச்சிக்கு வித்திட்டிருக்கின்றது. ஒரு, நாட்டின் உளவுத்துறை இத்தகைய பெரும் உளவுக் குறைபாட்டுடன் இருப்பது பெரும் அழிவுகளுக்கு காரணமாக அமைந்துவிடும் என்பதை இத்தாக்குதல் புடம்போட்டுக் காட்டுகின்றது. ஆனால், உளவுத்துறையின் வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன "பலம்வாய்ந்த, ஐரோப்பிய நாடுகளிலும், பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றது. அதனை, அவர்களினால் தடுக்க முடியவில்லை" என்று சிறுப்பிள்ளைத்தனமான கருத்தை முன்வைத்து சமாளித்துக் கொண்டிருக்கின்றார். ஜனாதிபதியானவர் இதனை சமாளிப்பதை விடுத்து உளவுத்துறையின் வீழ்ச்சியை, குறைபாட்டை ஆராய்ந்து அதனை மாற்றியமைக்க வேண்டும்.

இலங்கை உளவுத்துறையிடம் இக்குறைபாடு ஏன்? ஏற்பட்டது என்று பார்த்தல் "விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெற்றுவிடுவார்களே" என்ற ஒரேயொரு குறுகிய நோக்கிலான கண்காணிப்பை மட்டும் தீவிரமாக மேற்கொண்டு வந்ததால்த் தான் என்பதை உணரமுடியும். மேலும், இந்நாட்டின் உளவுத்துறையினர் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், காணி மீட்பு போராட்டம் மற்றும் அரசாங்கத்தை எதிர்க்கும் வகையில் நடைபெறக்கூடிய போராட்டங்களை செய்யும்போது, அவற்றை உண்ணிப்பாக கண்காணித்து, அச்சமூட்டும் பணிகளையும், முன்னாள் போராளிகளை குற்றவாளிகள் ஆக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளையுமே முன்னெடுத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக, அண்மையில் மட்டக்களப்பு, வவுனதீவில் காவற்துறையினர் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் போராளிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனை, இங்கு கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். குறித்த சம்பவத்தில் முதன்மையாக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி க.இராசகுமாரனை (அஜந்தன்), அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க அனுமதிக்காமல் சில வாரங்களுக்கு மேலாக விசாரணை மேற்கொண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஐந்து மாதங்களாக விளக்கமறியலில் வைத்திருந்தனர். ஆனால், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் பெரும் உண்மை வெளிப்பட்டது.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான தற்கொலை குண்டுதாரி ஷஹ்ரான் ஹஷிமின் சாரதி உள்ளிட்ட பயங்கரவாதிகள், "காவற்துறையினரை தாமே படுகொலை செய்ததாகவும், அதுவே, தமது முதலாவது தாக்குதல்" என்றும் ஒப்புக்கொண்டனர். இதனடிப்படையில், போலியாக கைது செய்யப்பட்ட குறித்த போராளி விடுதலை பெற்றிருக்கின்றார்.

எமது, நாட்டின் உளவுத்துறையின் கண்காணிப்பும், விசாரணைகளும் எப்படிப்பட்டது, எதைநோக்கியதாக அமைந்திருந்து என்பதை இந்தவொரு சம்பவத்தின் மூலம் ஊகித்துக் கொள்ளலாம். இதன்மூலம், இதுதான் இந்நாட்டு உளவுத்துறை கற்றுக்கொண்ட நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு உக்தியா எனும் கேள்வி எழுகின்றது. இத்தகைய, ஒரு இனத்திற்கு எதிரான குறுகிய பாதுகாப்பு உக்திமுறைகளில் இருந்து இலங்கை உளவுத்துறை மாற வேண்டும் (மாற்றப்பட வேண்டும்). அப்போதுதான், உளவுத்துறையின் கண்காணிப்பு பலம் பரந்துபட்டதாக விரிவடையும். அதனை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் வரையில் உளவுத்துறையினர் உணர்ந்து கொள்ளவில்லை. அப்படி, கூறுவதைவிட எமது நாட்டுக்குள் இருந்தே சர்வதேச பயங்கரவாதிகள் வெளிப்படுவார்கள் என்று உளவுத்துறையினர் துளி கூட சந்தேகப்படவில்லை. சில, ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இஸ்லாமிய அரசின் பயங்கரவாதிகள் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. அன்று, உளவுத்துறையினர் தமது கண்களை திறந்திருக்க வேண்டும். ஆயினும், அன்றும் அதனை உளவுத்துறையினரும் சரி, அரசும் சரி உதாசினம் செய்தே செயற்பட்டனர். ஏனெனில், தமிழர்கள் மட்டுமே இந்நாட்டில் ஆயுதம் தூக்குவார்கள் எனும் இனவாதச் சிந்தனை அவர்களிடம் இருந்திருக்கலாம்!. உளவுத்துறையினரால், தமிழ் மக்கள் அதிகம் துயரை அனுபவித்துள்ளனர். இருந்தபோதிலும், எமது நாட்டின் மக்கள் அனைவருக்கும் உயிர் அச்சுறுத்தலாக இருக்கும் இப்பயங்கரவாதத்தை அடியோடு அழிக்க உளவுத்துறையினர் பலம்பெற வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

ஆகவே, அரசாங்கம் நடந்தவற்றை மறைக்க முயற்சிப்பதை விடுத்து உளவுத்துறையை பலம்மிக்கதாக மீள்கட்டமைக்க வேண்டும். தமது உரிமைக்காக, நீதிக்காக, இருப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு எதிராக உளவுபார்ப்பதை கைவிட்டு, இந்நாட்டுக்கு வெளியில் இருந்து வந்துள்ள, வரப்போகும் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற இந்த நாட்டின் உளவுத்துறையை, பாதுகாப்புத்துறையை தொழில்நுட்ப வளங்கல்களுடன் சிறப்பாக வழிநடத்த வேண்டும். அப்போதுதான், இந்நாட்டிற்கு இன்று ஏற்பட்டிருக்கும் கொடூரமான சர்வதேசப் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து இச்சிறிய நாட்டை காப்பாற்றி, பயங்கரவாதிகளை அழித்தொழிக்கவும் முடியும். அது, சகல இனங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மலரச் செய்து, அச்சமற்ற சூழ்நிலை நீக்கி, நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் உதவியாக அமையும்!.

07.06.2019
#பிரகாஸ்
Read More

வன்முறைப் போக்கு சிறுவர் மட்டத்திற்கு மாறுகின்றதா?

June 16, 2019
இளைஞர்களிடையில் காணப்பட்ட அடிதடி வன்முறைப் போக்கு இப்போது மெதுமெதுவாக அவர்களிடமிருந்து சிறுவர்கள் மட்டத்திற்கும் மாறிச் சென்று கொண்டிருப்பதை அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஹட்டன் - தரவலைப் பகுதியில் அண்மையில் கிரிக்கெட் போட்டி ஒன்றின் பின்னணியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சிறுவர்கள் உட்பட இளைஞர்கள் சிலருக்கு இடையில் சிறிய அடிதடி வன்முறைச் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. அதில், கல்லினால் தாக்கப்பட்ட இரு இளைஞர்கள் காயமடைந்திருந்தனர். இது தொடர்பில் ஐந்து சிறுவர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின் சிசிடிவி காணாெளி எனக்கு கிடைத்திருந்தது. முதலில் தாக்குதலை சிறுவர்களே தொடக்கினர் என்பதை அவதானிக்க முடிந்தது. உண்மையில் இது மிகவும் வேதனைக்குரியது. இளைஞர்கள் பதிலுக்கு கற்களை கொண்டு தாக்கிய போதும், அவர்களைச் சிறுவர்கள் என்பதால் தாக்குவதில் தயங்கியதையும் அதன்போது காணமுடிந்தது. இல்லையேல் அது பெரும் ஆபத்தில் முடிந்திருக்கலாம்.

கல்வி கற்கும் வயதில் சிறுவர்களிடம் இத்தகைய வன்மச் சிந்தனை வளர்வதும், அதனைச் செய்து முடிப்பதும் அவர்களின் எதிர்காலத்தை மிக மோசமாக கேள்விக்குள்ளாகும் விடயமாகும். இந்தகைய போக்கை இப்போதே சிறுவர்களிடத்தில் இருந்து களைந்தெடுக்க வேண்டிய தேவை அவசியமானதாகும்.

அண்மைக்காலமாக நாட்டில் சிறுவர்கள் இப்படியாக வழிதவறிச் செல்வது அதிகரித்திருப்பதை என்னால் உணர முடிகின்றது. பாலியல் துஷ்பிரயோகம், வாள் வெட்டு வன்முறை, குழு மோதல் என்று சில தவறான பாதையில் 18 வயதிற்கு கீழ் காணப்படும் சிறுவர்கள் தடம்மாறிச் செல்வது போன்ற சம்பவங்கள் அங்காங்கே நடைபெற்றுள்ளன. அதனுடன் ஒன்றாகவே இச்சம்பவமும் நடைபெற்றுள்ளது. ஆனால் இதில் 10 வயது வரையில் இருக்கக்கூடிய சிறுவர்களும் பங்குபற்றியிருப்பது தான் கவலை தருவதாக அமைந்துள்ளது.

இச்சிறுவர்கள் சரியான முறையில் பாடசாலைக்கு செல்வதில்லை என்று அங்கிருக்கும் இளைஞர் ஒருவர் என்னிடம் கூறியிருந்தார். இதுவும் சிறுவர்களை தவறான பாதையில் வழிநடத்தக் கூடிய சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தும் ஒன்றே. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களும் சிந்தித்து செயற்பட வேண்டிய தேவையை இச்சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.

எனவே, பெற்றோர் தமது பிள்ளைகளின் செயற்பாடுகளை உண்ணிப்பாக அவதானிப்பதுடன், ஆசிரியர்கள் தமது மாணவர்களின் வருகை தொடர்பிலும், அவர்களது போக்கு குறித்தும் கரிசனை கொண்டு அது தொடர்பில் சரியான வழிநடத்தல்களை செய்ய வேண்டும். அதேபோல் இளைஞர்கள் அதாவது சிறுவர்களாக இருக்கும் மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் சரியான முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவற்றை செய்தால் வன்முறை போக்கில் செல்லும் சிறுவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பது எனது கருத்தாகும்.

ஆனால், காலமும், மனிதர்களும் மாறிவிட்ட இக்காலகட்டத்தில் தமது மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் கரிசனை செலுத்த வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றது. காரணம், மாணவர்களை திருத்த வேண்டும் எனும் நோக்கில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் செயற்பட்டால், மாணவர்களின் பெற்றோர் அது தொடர்பில் கடுமையாக கடிந்து கொள்ளும் போக்கு காணப்படுகிறது. அதனால் ஆசிரியர்கள் தமது போக்கிலேயே இருத்துவிடுகின்றனர்.

அதுமாற வேண்டும், இளைஞர்கள் சிந்திக்க வேண்டும், பெற்றோர் பிள்ளைகள் குறித்து அக்கறையாக இருக்க வேண்டும். அதேபோல், சிறுவர்கள் தொடர்பிலான அதிகாரிகளும் இவற்றில் இருந்து சிறுவர்களை மீட்கும் நடவடிக்கைகளை அல்லது பாதுகாக்கும் வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும் "மாணவர்கள் எதிர்காலத் தலைவர்கள்" என்று சொல்லப்படும் கூற்றை எப்போதும் சரியான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டுமாயின். தடம்மாற முனையும் சிறுவர்களை தலைவர்களாக மாற்றும் முன்னுதாரணப் புருசர்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்!.

14.06.2019
#பிரகாஸ்
Read More

Wednesday, June 5, 2019

சிந்தனையில் இனவாதம் இருந்தால் எதுவும் இனவாதமே

June 05, 2019
முகநூலில் காணப்படும் குறிப்பிட்ட ஒருசிலர் நான் பதிவிடும் செய்திகளை வைத்து என்னை இனவாதியாக சித்திரிக்க முயற்சிப்பதை அண்மைக்கலமாக அதிகம் அவதானித்து வருகின்றேன். அண்மையில் "ஊடக விபச்சாரி" என்று பெயர் தந்தனர். நேற்று முன்தினம் ஒருபடி மேல் சென்று "இவன் எல்லாம் ஊடகவியலாளனா" என்று இழிவுபடுத்தியிருக்கின்றனர்.

எனது முகநூலில் நான் எனக்கு கிடைக்கும் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள், இணையத்தளம் மூலம் பெறும் பலதரப்பட்ட செய்திகளை சேகரித்த தகவல்களை கொண்டு உறுதி செய்து பதிவிட்டு வருகின்றேன். சில சந்தர்ப்பங்களில் தவறான செய்தியை பதிவிட்டால் கூட உண்மையை அறியும் போது அதனை மீளச் சுட்டிக்காட்டவும் செய்கிறேன். எழுதிய செய்தியில் இடம், விபரம் அல்லது வேறு விடயங்கள் தவறாக இருந்தாலும் அதனை சுட்டிக்காட்டும் போது அவற்றை அவதானித்து திருத்திக் கொள்வேன்.

ஆனால், முஸ்லிம்கள் சம்பந்தப்படும் செய்திகளை நான் எழுதினால் அவர்களைச் சார்ந்த சிலர் என்னை இனவாதியாக்கும் முயற்சிகளை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றனர். கைது இடம்பெற்றால் சந்தேகநபரின் பெயர், தேடுதல் அல்லது சம்பவம் நடந்த பகுதி - அண்டிய இடம் இவற்றை குறிப்பிட்டால் அதனை இனவாதம் என்கிறார்கள். அதில் சுகம் இருக்கின்றது என்கின்றனர். ஒருவேளை, தவறுதலாக மேலதிக தகவலை உள்ளடக்காவிட்டாலும் அதனைக்கூட இனவாதம் எனச் சொல்லி தமது மனங்களில் இருக்கும் அழுக்கை என் மீது அள்ளி வீசுகின்றனர்.

எனது செய்திகளை பார்க்கும் அனைவரும் இதனை அறிவார்கள். இதற்கு காரணம் இத்தகைய சிலரின் மனம் இனவாத எண்ணங்களினால் நிறைந்து போயிருப்பதுதான். குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான கைது நடவடிக்கை தகவல்களை பொலிஸ் ஊடகப் பிரிவே அறிவிக்கின்றது. அதன்மூலம், கைது செய்யப்படும் நபர்களின் விபரங்களையும் நாம் அறிய முடியும். அதனையே செய்திகளாக எழுதுகிறோம். அதேபோல், செய்தியாளர்களினால் சேகரிக்கப்படும் செய்திகளாக இருப்பின் அவற்றில் கூடுதல் தகவல் இருக்காது. அவர்கள் தமது ஊடகங்களும் ஆறுதலாக அறிக்கையிடும் போதே முழுமையான தகவல்களை கொடுப்பார்கள். இதுபற்றி எல்லாம் அவர்களிடம் புரிதல் கிடையாது. கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு செய்தியில் பொலிஸ் பிரிவை கூறாமல் எழுதிய போது அதனை இனவாதம் என்றார்கள். இதே ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு செய்தியில் கைது எப்படி நடந்தது என்பதை கூறவில்லை என்று அதற்கும் இனவாதச் சாயம் பூசினார்கள். இப்போது, முஸ்லிம்கள் சார்ந்த எந்தச் செய்தியை எழுதினாலும் இனவாதி என்று கூறி எனது நட்பில் இல்லாத நபர்களையும் எனக்கு எதிராக தூண்டிவிடுகின்றனர்.

உண்மையில் நான் எந்தச் செய்தியாக இருந்தாலும் கிடைக்கும் தகவல்படி மட்டுமே எழுதிவிட்டுச் செல்கிறேன். இன, வன்முறைகள் நடக்கும் சந்தர்ப்பங்களில் எனது செய்திகளை, அதன் கீழ் வரும் கமெண்ட்களை கவனமாக கையாளுகிறேன். ஆனால், இனவாதிப்பட்டம் வழங்கி என்னை, என் அடையாளத்தை இழிவுபடுத்துகின்றனர். முஸ்லிம்கள் சம்பந்தப்படும் செய்தியை எழுதினாலே அதனை இனவாதம், இவன் இனவாதி, இவனுக்கு இவற்றில் ஆனந்தம் என்று பிதற்றிக் கொள்கின்றனர். நேற்றும் ஒரு பதிவில் புரிதல் இன்றி இனவாதி என்றார்கள். இதில், வேடிக்கை என்னவென்றால் ஒருவர் எனது செய்தியை அல்லது எனது கருத்துப் பதிவு ஒன்றை பார்த்து "இனவாதத்தில் எழுதுகிறாய்" என்று கமெண்ட் அடிக்கும் போது அந்த ஒற்றைக் வசைபாடலை வைத்து மேலும் பலர் வந்து எழுதப்பட்டது என்ன என்பதை கூட பாராமல் இனவாதப் பட்டம் கட்டும் செயலும் நடைபெறுகின்றது.

அத்தகையை இனவாதச் சிந்தனையாளர்களை நோக்கி நான் ஒன்றைக் கூறுகிறேன் "இனவாதத்தில் செயற்பட வேண்டுமாயின், முஸ்லிம் நபர்களின் சில செயல்களை இனவாதப் பேச்சினால் எதிர்க்கும் சராசரி தமிழனாய், எதையும் இனவாதமாகச் சிந்திக்கும் - இனவாதம் கக்கும் உங்களைப் போல் என்னாலும் வெளிப்படையாக இனவாதத்தில் செயற்பட முடியும். நீங்கள் நினைப்பது போல் அதனை செய்திகளில் மட்டும் காண்பிக்க அவசியமில்லை" ஆனால், நான் ஒருபோதும் இனவாதத்தில் செயற்பட முயற்சித்ததில்லை. இனமுரண்களை வழிவகுக்கும் பிரச்சினைகளில் நடுநிலை தேடும் ஆளாக செயற்படும் போது என் இனவத்தவர்கள் கூட என்னை முஸ்லிம்களுக்கு அதிகம் ஆதரவு கொடுப்பவன் என்று விமர்சித்ததுண்டு.

"07.03.2018 அன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இருக்கக் கூடிய ஆரயம்பதி பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகளின் சுலோகத்துடன் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டது" என்ற செய்தியை எழுதியதில் இருந்து என்னை இனவாதியாக சித்திரிக்கும் முயற்சியில் குறிப்பிட்ட சிலர் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். அண்மைய நாட்களில் இனவாதம் பரப்பியவர்கள் கைது செய்யப்பட்ட போது என்னை சுட்டிக்காட்டி எனக்கும் அப்படி நடந்தால் அவர்களது மனம் எந்தளவிற்கு குளிரும் என்பதை கூட வெளிப்படையாக காட்டினார்கள்.

அப்போதெல்லாம் நான் அமைதியாக இருந்தேன் பொறுமையாகவும் இருந்தேன் ஆனால் என்னை இனவாதியாக காண்பிக்கும் - இழிவுபடுத்தும் முயற்சி தொடர்ச்சியாக நடப்பதால் பொறுமை இழந்துவிட்டேன். உண்மையிலேயே இனவாதியாக மாறிவிடலாமோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. எனினும், பொறுமை இழந்தாலும் எனக்கென்று நான் ஏற்படுத்திக் கொண்ட பாதையை அவர்களுக்காக மாற்றப்போவதில்லை. இனவாதச் சிந்தனைகளில் செயற்படும் நபர்களை இனியும் தனிப்பட்ட மரியாதை நிமித்தம் நட்பில் வைத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். எனவே, என்னை இனவாதியாக, ஊடக விபச்சாரியாக நினைப்பவர்கள் நீங்களாகவே நட்பில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.

"ஐந்துரூபாய் போன் இருந்தால் நீயும் ஊடகவியலாளன்" என்று என்னை மனதில்வைத்து பொதுவாக பதிவிடப்பட்டிருந்த பதிவு ஒன்றை நேற்றுப்பார்த்தேன். உண்மைையைச் சொன்னால் நான் கைபேசியையும், முகநூலையும் பயன்படுத்தியிருக்கா விட்டால் இன்று ஊடகவியல் திறமை அல்லது ஊடகவியலாளன் என்று சொல்லும் அடையாளம் கிடைத்திருக்காது. இவையிரண்டும், இருந்ததால் தான் அது முடிந்துள்ளது. என்னை ஊடகவியலாளன் ஆக வளர்த்துவிட்டது இந்த முகநூலும், இதில் கிடைத்த நண்பர்களும், என் மீதான கேலிகளுமேயாகும். நான் ஊடகவியலாளன் எனும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டிருக்கவில்லை. அதற்குரிய அத்தனை தகுதிகளையும் நான் வளர்த்துக் கொண்டேன். ஆனால், "அசாம் அமீன், சத்துர போல் இலங்கையில் பிரபலமான, அமெரிக்கா ஆக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் கற்ற ஊடகவியல் தர்மத்தை மீறாத ஊடகவியலாளர் பிரகாஸ்" என்று மிகவும் இழிவாக கேலி செய்கின்றனர்.

தம்மை மட்டுமே பெரும் தகுதி கொண்டவர்களாக எண்ணிக் கொண்டு அடுத்தவனை இழிவாக நினைக்கும் மனநிலை கொண்டவர்களின் இழிசொல்லுக்கு நான் கலங்கப் போவதில்லை. நான் அசாம் அமீனும் இல்லை பிரகீத் எக்னெலிகொடவும் இல்லை நிமலராஜனும் இல்லை என் திறமைக்கு, தகுதிக்கு உட்பட்ட சாதாரண ஒரு ஊடகவியலாளன் மட்டுமே. நான், அதிகம் படிக்காத, ஊடகம் கற்றுக் கொள்ளாத ஊடகவியலாளன் என்பதை கர்வமாக கூறுவேன்.

04.06.2019
#பிரகாஸ்
Read More

Tuesday, May 28, 2019

பயங்கரவாதத்தை தழுவி இரக்கமற்ற செயலை செயற்படுத்த ஆத்திரத்தை வளர்த்தனர்

May 28, 2019
முன்னதாக, ஒன்பது தற்கொலைக் குண்டுதாரிகளும் பெயர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். ஒருவாரத்தில் ஒவ்வொருவரையும் பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டனர். அதில் இருந்து, அவர்களது கதைகளும் வெளிப்பட ஆரம்பித்தது.
அடிப்படைவாதப் போதகரும், குண்டுத் தாக்குதல்களின் தலைவனாகவும் குற்றம்சாட்டப்படுபவர் மொஹமட் சஹ்ரான் (33). அவரது சொந்த ஊரான கிழக்கு மாகாணம் - காத்தான்குடியில் அவர் சிறிது அங்கீகாரத்தை பெற்றவராக இருந்தார். முஸ்லிம் நகரங்களில் உள்ள பிரதான மசூதிகள் அவரை நிராகரித்திருந்தது. அவர், 2017ம் ஆண்டில் மோதல் ஒன்றினையடுத்து தப்பிச் செல்வதற்கு முன்னர் சஹ்ரானின் உறுப்பினர்கள், இஸ்லாமியம் பற்றிய அவரது விளக்கத்தை சவாலுக்கு உட்படுத்திய சக போதகர் ஒருவருக்கு எதிராக அதிகாரிளிடம் முறையிட்டனர்.
ஆனால், கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடவடிக்கைகளுக்காக இளம், ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் ஏனையவர்களுடன் இணைந்துகொண்டனர். அடிப்படைவாதிகள் பல்வேறு நேரங்களில், பல்வேறு காரணங்களுக்காக சமூக வலைத்தளம் மற்றும் நேரடியாவும் சஹ்ரானை தொடர்பு கொண்டுள்ளனர்.
குற்ற விசாரணை பிரிவு (சிஐடி) மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு (ரிஐடி) ஒன்பது தற்கொலை குண்டுதாரிகளையும், இரண்டு தீவிரவாத அமைப்புக்களையும் கண்டுபிடித்தனர். தேசிய தௌஹீத் ஜமாஅத் சஹ்ரான் தலைமையிலும் ஜமாஅத்தி மில்லாத்தி இப்ரஹிம் சமூக வலைத்தளத்தில் சந்தித்த இளைஞர்களினால் அமைக்கப்பட்டது.
உள் அதிகாரப் போராட்டங்களினால் சீர்குலைந்த இரு அமைப்புக்களும் சஹ்ரானின் குறைந்த தொடர்புடைய குழுவாக கடந்த ஆறு மாதங்களில் புதிய நடவடிக்கைக்காக மாற்றப்பட்டது. இடங்களும் மாற்றப்பட்டது. அவர்கள் சித்தாந்தத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டனர். ஏப்ரல் 21 அன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தி 250 பேரை கொன்றனர். அவர்கள், அமைதியாகவும், திறமையாகவும் இரகியமான முறையில் பயங்கரவாத வலையமைப்பை கட்டியெழுப்பியுள்ளனர்.
பாணக்காரச் சகோதரர்கள் -
இஷானா ஏற்றுமதி நிறுவனம் கிட்டத்த மூன்று தசாப்தம் பழமைவாய்ந்த ஏற்றுமதி நிறுவனமாகும். அதன் நிறுவனர் வை.எம்.இப்ரஹிம் பரந்தளவில் பணக்காரராக அறியப்படுகிறார். அவரது நண்பர்கள் அனைவரும் அரசியல் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அவரை மதிக்கின்றனர். இயற்கையின் போக்கில் அவரது மகன்கள் அவரது வியாபாரத்தையும், செல்வத்தையும் மற்றும் ஒருவேளை, நல்லெண்ணத்தையும் பெற்றவர்களாகவும் இருந்திருப்பார்கள். ஆனால், மாறாக அவர்கள் தற்கொலைக் குண்டுத்தாரிகள் ஆவதை தெரிவு செய்துள்ளனர். இப்போது அவரது தந்தையை சிஐடியினர் தடுத்துவைத்து விசாரித்துவருகின்றனர்.
இன்ஷாப் அஹமட் மொஹமட் இப்ரஹிம் (33). அவர் இஷானா ஏற்றுமதி நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான முதலாளியின் மகன். இன்ஷாப், பிரபலமாக அறியப்படும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் பயின்றவர். அவர் பல்கலைக்கழகம் செல்லவில்லை. ஆனால் மசாலா வர்த்தகத்தின் தந்திரங்களை கற்றுக் கொண்டார். ஒன்பது உடன்பிறப்புக்களில் இன்ஷாப் இரண்டாவது, மற்றும் இல்ஹம் மூன்றாவது மகனுமாவார்கள். அவர்கள் வர்த்தகத்தில் நேரடியா ஈடுபட்டனர். இருவரும் குழுப் பணிப்பாளர்களாக இருந்தனர். அவற்றில் இன்ஷாப் தீவிரவமாக செயற்பட்டவர் என்று அவரது நிறுவனத் தகவல் ஒன்று கூறுகிறது. இருவரும் அடிக்கடி இந்தியா சென்று பணியாற்றியுள்ளனர். "இன்ஷாப் எமது தொழில்நுட்ப முதலாளியாக இருந்தாலும் அவர் எமக்கு கட்டளையிட்டத்தில்லை. உதவி கேட்பது என்றால் இதை செய்ய முடியுமா என்று கேட்பார்" என்கிறார் அவரது பணியாளர். ஆனால், மறுபுறத்தில் "இல்ஹம் (31) குடும்ப நிகழ்வுகளில் அரிதாகவே கலந்து கொள்வார், மக்களுடன் பெரிதாக பேசமாட்டார்" என்று ஒரு குடும்ப உறுப்பினர் கூறுகிறார்.
ஓர் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் இரு சகோதரர்களின் மாற்றத்தை கவனித்துள்ளனர். இன்ஷாப் தந்தையின் எதிர்ப்பை மீறி வட்டிக்கு கடன்களை நடைமுறைப்படுத்தினார். "எமது மதத்தில் வட்டிக்கு கடன் வாங்க அனுமதியில்லை, இதனை நிறுத்த வேண்டும்" என்று கூறியதாக மூத்த ஊழியர் நினைவுகூருகிறார். இருவரும், கடந்த ஆண்டு நிறுவனக் குழுவில் இருந்து விலகினர் என்றும் அவர் மேலும் கூறினார்.
இன்ஷாப் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெல்லம்பிட்டியில் அமைத்த செப்பு தொழிற்சாலையை தொடர்ந்தும் வழிநடத்தினார். இல்ஹம் தமது நிறுவனத்தில் ஒரு பகுதியை நிர்வகித்தார். ஏப்ரல் - 18ம் திகதி சென்றுவந்த, சின்னமன்ட் கிரான்ட் ஹோட்டலுக்கு இன்ஷாப் சென்று தன்னை வெடிக்க வைத்தார். அதேபோல், குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் மற்றும் இல்ஹகம் அருகில் உள்ள சங்ரிலா ஹோட்டலில் வெடித்தனர். அதேநாளில், இல்ஹமின் கர்ப்பிணி மனைவி பாத்திமா தெமட்டகொடயில் தற்கொலை தாக்குதலை நிகழ்த்தினார்.
சகோதரர்கள் இருவரும் முகநூல் மற்றும் தனியார் அரட்டை அறைகள் மூலம் சஹ்ரானுடன் தொடர்பை பேணி வளர்ந்திருக்கலாம் என்று விசாரணையாளர்கள் நம்புகின்றனர். "தாக்குதலின் பிரதான நிதி வழங்குனராக இல்ஹம் இருப்பதாக" உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் தீவிரவாதம் -
தொலைக்காட்சி ஒன்று தாஜ்சமுத்ரா ஹோட்டல் சிசிடிவி காட்சியை வெளியிட்டது. லதீப் ஜமீல் மொஹமட் (36) உணவகக் கதிரையில் அமர்ந்திருந்தார் சுமையான தனது பின்பக்கபேக்குடன். தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் அவர் அங்கிருந்து வெளியேறுகிறார். ஊழியர் ஒருவர் அவரது பயங்கரவாதத்தை சுமந்த பாரிய பேக்கினை கொண்டுசெல்ல உதவினார். ஐந்து மணி நேரங்களின் பின்னர் அவர் தெஹிவளையில் சிறிய ஹோட்டல் முன் வெடித்தார். ஜமீல் லண்டனில் கிங்ஸ்டன் பல்கலைக்கழத்தில் 2005 - 2006 விண்வெளி பொறியியல் பயின்றார். பின்னர், முதுகலை பட்டத்திற்காக அவுஸ்திரேலியா சென்றார். அங்கிருந்து 2013ம் ஆண்டு வெளியேறியுள்ளார். ஜமீலின் சகோதரி சம்சுல் ஹிதாயா டெய்லி மெயிலுக்கு கூறுகையில் "பிரிட்டனில் பயின்ற போது, அவர் சாதாரணமாக இருந்தார். ஆனால், அவுஸ்திரேலியா சென்று வேறு ஒரு மனிதிராக இலங்கைக்கு திரும்பினார்" என்று சொல்கிறார்.
அவுஸ்திரேலிய தகவல்களின்படி, அவுஸ்திரேலியாவில் தேடப்படுபவராக இருக்கும் இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதி நெயில் ப்ரகாஷுடன் தொடர்புடைய ஆதாரங்களின் அடிப்படையில் ஜமீல் வெளிப்படையான தீவிரவாதச் சார்பானவராக அடையாளப்படுத்தப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. ஜமீல் முன்னதாகவே, அடிப்படைவாதியாகிலிட்டார். அவர் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்த போது பிரிட்டிஸ் இஸ்லாமிய அறிஞர் அன்ஜம் சௌத்தரியை சந்தித்தார். 2003ம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்த போது 20 வயதிலயே ஜமீல் கடுமையாக பாதிக்கப்பட்டார் என்று அவரது நண்பர்கள் ஊடகத்திற்கு கூறுகின்றனர். ஜமீல் மற்றும் இப்ரஹிம் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருந்தனர். "இல்ஹமிற்கு ஒன்லைன் மூலம் ஜமீலுடன் தொடர்பு ஏற்பட்டது" என்று மூத்த விசாரணையாளர் கூறுகின்றார்.
ஜமீல் போலவே, அலவுதீன் அஹமட் முபாத் மாணவனாக இருந்தார். அவர் கொழும்பில் உள்ள கல்லூரி ஒன்றில் சட்டப் பட்டம் பெற்றிருந்தார். நடைமுறை பயிற்சியை பதிவு செய்துள்ளார். 3 வருடங்களுக்கு முன்னர் திருமணத்தை தொடர்ந்து மனைவியின் சொந்த ஊரான சாய்ந்தமருதில் வசித்துவந்துள்ளார். சாய்ந்தமருதில், ஏப்ரல் 27 நடந்த தாக்குதலில் 6 சிறுவர்கள், 3 பெண்கள் உட்பட தற்கொலை குண்டுதாரிகளுடன் 15 பேர் பலியாகினர். அவர்களில், சஹ்ரானின் தந்தையும், இரு சகோதரர்களும் அடங்குகின்றனர்.
முபாத், ஏப்ரல் - 14ம் திகதி இறுதியாக தனது சகோதரியின் வீட்டிற்கு கர்ப்பிணி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் புதிதாக பிறந்த குழந்தையை பார்க்க சென்ற பின்னர் சாய்ந்தமருதை விட்டு வெளியேறினார் என்று அவரது தந்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார். குண்டுத் தாக்குதல்கள் நடந்த அன்று காலை குடும்பத்தினருக்கு அழைப்பெடுத்த முபாத்தின் மனைவி "முபாத் எங்கே என்று தெரிந்தால் கூறுமாறு கேட்டுள்ளார்". மே - 5ம் திகதி முபாத்திற்கு குழந்தை பிறந்தது. 15 நாட்களில் தந்தை அந்தோனியார் ஆலயத்தில் குண்டு தாக்குதல் மூலம் பலரை தன்னுடன் சேர்த்து கொன்றுகுவித்தார்.
முன்னோடிகள் -
சஹ்ரானின் வலையமைப்பு குண்டு தாக்குதல் நடைபெறும் வரை கட்டுப்படுத்தப்படவில்லை. மூன்று ஆண்டுகளில் அவர்கள் பல்வேறு ஆதரவாளர்களை தேடிக் கொண்டனர். உதாரணத்திற்கு, அப்துல் ஹக் சகோதரர்கள். மாவனல்லயில், புத்தர் சிலைகளை உடைத்த போது 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் மொஹமட் சாதிக் அப்துல் ஹக், மொஹமட் சகீட் அப்துல் ஹக் இருவரும் தலைமறைவாகினர். குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இருவரும் பிடிபட்டனர். "குண்டுத் தாக்குதல்களில் ஹக் சகோதரர்கள் பங்குபற்றிய ஆதாரம் இல்லை" என்று இராணுவ புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், "அவர்கள் குண்டுதாரிகளுக்கு பயிற்சி வழங்கியிருக்கலாம்" என்று ஏனைய புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹக் சகோதரர்கள் மாவனல்லயில் பக்தி உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் தந்தை இப்ரஹிம் மௌவி ஒரு சிறந்த, அறியப்பட்ட போதகராகவும், ஜமாஅத்-இ இஸ்லாமி எனும் செல்வாக்கு மிக்க மதச் சமூக அமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார். சாதீக் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை. கராத்தே திறமைகளினால் அறியப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. அப்துல் ஹக் சகோதரர்கள் "ஒன்று அல்லது இரண்டு தடவை சஹ்ரானை சந்துள்ளனர்" என்று நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகிறார்.
விசாரணையாளர்களினால் முன்னைய சந்திப்பை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், சகோதரர்கள் 2017ம் ஆண்டில், சஹ்ரானின் கோட்பாட்டு காணொளிகளினால் கவரப்பட்டு அவர்கள் திசை திருப்பப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. "எமது விசாரணைகளில் சிலை உடைப்பு திட்டத்திற்கு முன்னர் 2018ம் ஆண்டில் இருந்து அவர்கள் சஹ்ரானுக்கு நெருக்கமாக இருந்தது புலப்படுகிறது" என்று மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
ஹக் சகோதரர்களின் நண்பர்கள், அவர்களிடம் வளர்ந்துவரும் தீவிரவாதத்தை அறிந்திருந்தனர். ஜமாத்-இ இஸ்லாமி மற்றம் அதன் இளைஞர் பிரிவான இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். சாதிக் புலமைப்பரில் ஒன்றுக்காக மூன்று மாதங்களில் திரும்பவதாக உறுதியளித்து துருக்கி சென்றவர். அங்கு நான்கு மாதங்கள் தங்கினார். "அங்கிருந்து சிரியாவிற்கு சென்றதாக நாம் கேள்விப்பட்டோம்" என்று அதனுடைய உறுப்பினர் ஒருவர் கூறுகிறார்.
"அவர்களது தந்தை, அவர்களை முன்னைய பாதையில் கொண்டுவர முயற்சித்தார். ஆனால், அவர்கள் அதற்கு பதிலாக தந்திரோபாயமாக மௌவியை தமது தீவிரவாத எல்லைக்குள் அழைத்து சென்றனர்" இப்படி உறவினர் ஒருவர் கூறுகிறார். "ஒரு ஆண்டிற்கு முன்னர் அவர்களது தந்தையும் ஜமாத்-இ இஸ்லாமி அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் எமது அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தினார்" என்று அதனுடைய உறுப்பினர் ஒருவர் கூறுகிறார். மாவனல்லையில் 2001ம் ஆண்டு முஸ்லிம் விரோத தாக்குதல் இடம்பெற்றது. முஸ்லிம்கள் தமது சொத்துக்களை இழந்தனர். ஆனால் பதிலடி கொடுக்கவில்லை. அப்போது, ஹக் சகோதரர்கள் இளம் வயதினராக இருந்தனர்.
ஒரு திருமணம் மற்றும் ஒரு கூட்டணி -
சஹ்ரான் மற்றும் அடிப்படைவாத இளைஞர்களின் தொடர்பு 2016ம் ஆண்டு திருமணம் ஒன்றில் முறைசாரா கூட்டணியாக மாற்றப்பட்டுள்ளது. விசாரணையாளர்கள் தெரிவிக்கையில், "இந்த திருமணம் காத்தான்குடியில் நடந்தது. ஜமாத்தி மில்லாத்தி இப்ரஹிம் உறுப்பினர்கள் பலர் சென்றிருந்தனர். அங்கு, இல்ஹம் மற்றும் ஜமீலும் இருந்தனர் என்று நினைக்கிறோம்". 2017ம் ஆண்டு சஹ்ரான் தலைமறைவாகிய பின்னர் அவர்கள் வட்சப் மற்றும் டெலிகிராம் மூலம் தொடர்புகளை பேணிக்கொண்டனர். ஆனால், விசாரணையாளர்களின் கூற்றுப்படி "2018ம் ஆண்டின் நடுப்பகுதியில் தாக்குதலுக்கு திட்டமிருக்கவில்லை. ஆனால், எதிர்கால தாக்குதலுக்காக தயாராகினர். வண்ணாத்துவில்லுவில் பெருந்தொகை வெடிமருந்து கைப்பற்றப்பட்டது முக்கிய விடயமாக சுட்டிக்காட்டப்படுகிறது".
"சந்தேகநபர்களை விசாரணை செய்ததில் இருந்து சஹ்ரான் தேவாலயங்களை தாக்குவது தொர்பில் பேசினார் என்பது தெளிவாகிறது" என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். அவர், நியூசிலாந்து தாக்குதலினால் இந்த சதித்திட்டமிடப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறார். ஆயினும், "நியூசிலாந்து தாக்குதல் மார்ச்சில் நடந்தது. இயல்பாக ஒரு அதிநவீன தாக்கதலுக்கு திட்டமிடல் மற்றும் நீண்ட காலம் ஒன்று தேவைப்படும். அந்த கோட்பாடுகளை ஆதரிக்கும் எந்த ஆதாராமும் இல்லை என்று மேலுமொரு மூத்த அதிகாரி குறிப்பிடுகிறார். உண்மையில், சந்தேகத்திற்குரிய நபர்கள் இஸ்லாமிய அரசின் தலைமையுடன் நேரடி முகவர்களாக இருக்கின்றார்களா என்பதே முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கின்றது என்று அவர் கூறுகிறார். ஜமீல் மற்றும் சஹ்ரானின் சகோதரன் ரில்வான் உள்ளிட்ட சில சந்தேகநபர்கள் சில ஆண்டுகளுக்கு முன் சிரியா சென்று திரும்பிய இஸ்லாமிய அரசு உறுப்பினர்கள் ஐவரில் இருவருடன் தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் காண்பிக்கின்றது. ஆனால், குண்டுதாரிகளுக்கு இஸ்லாமிய அரசுத் தலைமையுடன் நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்கிறார்.
இஸ்லாமிய அரசின் தலைமையுடன் சஹ்ரான் சுதந்திரமாக தொடர்பில் இருந்தாரா என்து தெளிவற்றதாக இருக்கின்றது. அவர் அடிக்கடி சாம் வழிமுறைகளை பெற்றுள்ளதாக சிரியாவை பற்றி காணொளிகள், உரையாடல்கள் மூலம் கூறிவந்தார். விசாரணையாளர்களிடம் மற்றுமொரு முரண்பாடு காணப்படுகிறது. "இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஏன்? சக சிறுபான்மை சமூகத்தை இலக்கு வைத்தனர். அவர்களுடன் எந்த விரோதமுமம் இல்லை" என்பதால். சாய்ந்தமருது தாக்குதலின் போது அங்கு வெள்ளை ஆடைகள் மீட்கப்பட்டது. அது பௌத்த பெண்கள் தமது மதத்திலத்திற்கு அல்லது பிரார்த்தனைக்கு செல்லும்போது அணிவதாகும். மே 18-19 அல்லது ஜூலை கண்டிப் பெரஹராவின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஜமாத்தி மில்லாத்தி இப்ரஹிம் உறுப்பினர்கள் ஆரம்பத்தில் சிரியாவில் இஸ்லாமிய அரசுடன் இணைய நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், சிரியா, ஈராக்கில் அவர்கள் வீழ்ச்சியடைந்த போது திட்டத்தை கைவிட்டனர் என்று அதிகாரபூர்வ தகவல் ஒன்று கூறுகிறது. அதில் இருந்து இலங்கையில் தாக்குதல் ஒன்றை செயற்படுத்த இல்ஹம் ஆர்வம் கொண்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு சதியின் மூலம் அவருக்கு பதில் கிடைத்தது. அவரது சகோரர் இன்ஷாப் இறுதி நேரத்தில் வளைக்கப்பட்டார் போல் தெரிகிறது. அவர் மே மாதம் மக்காவிற்கு குடும்பத்தாருடன் செல்வதற்கு விமான முற்பதிவு செய்திருந்தார். உயிர்த்த ஞாயிறுக்கு சில வாரங்கள் முன்னர் அவர்கள் ஒரு சரியான அணியாக உருவானார்கள். அவற்றுக்கான பாத்திரங்கள் பட்டியலிடப்பட்டது. "இறுதி வாரத்தில் அவர்கள் த்ரீமா (threema) எனும் அதி உயர் பாதுகாப்பை கொண்ட மெசஞ்சர் சேவையை பயன்படுத்தியுள்ளனர்" என்று ஒரு அதிகாரி கூறுகிறார்.
மேலும், எதிர்கால ஆய்வுகளின் மூலம் "இந்த சதித்திட்டம் நியூசிலாந்து தாக்குதலுக்கு பின்னர் அல்லது இலக்கு மாற்றப்பட்டு நடத்தப்பட்டதா? என்பது வெளிப்படுத்தப்படும். ஆனால் தற்கொலை குண்டுதாரிகள் பயங்கரவாதத்தை தழுவி இரக்கமற்ற செயலை செயற்படுத்த சமீபத்திய ஆண்டுகளில் போதுமான ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டனர் என்பது தெளிவாக தெரிகின்றது. அதற்கு பிறகு திகதி, இடம், இலக்கு என்பது வெறும் தகவல் மட்டுமே!.
(குறிப்பு: ஆங்கிலக் கட்டுரையின் சில முக்கியமற்ற பந்திகள் தவிர்த்து எழுதப்பட்டது)
ஆங்கிலத்தில் :- மீரா ஸ்ரீனிவாசன் - (த ஹிந்து).
தமிழில் :- ஞா.பிரகாஸ் - (ஆறாம் அறிவு).
Read More

Monday, May 27, 2019

வடக்கில் தீவிர பாதுகாப்புச் சோதனைகள் ஏன்?

May 27, 2019
நாட்டை உலுக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டிருப்பதால் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்று எண்ண முடியாது. எனவே, மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறுவதை தடுக்க தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். ஆனால், அது மக்களுக்கு அச்சத்தையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தாத வகையில் இடம்பெற வேண்டும்.

ஆயினும், இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தில் தேவையற்ற முறையில் அதிகரிக்கப்பட்டிருப்பதை அசௌகரியங்களை எதிர்கொண்டவர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இதனை, தெற்குடன் ஒப்பிடும்போது வடக்கில் கூடுதலாக நடைபெறுவதை உணரமுடிகின்றது. இது குறித்து, நேற்று பாராளுமன்றில், சேனாதிராஜா, டக்ளஸ், சிறிதரன் உள்ளிட்டோரும் அரசை கடுமையாகச்சாடி குற்றம் சாட்டியிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பேருந்தில் பயணம் செய்யும் போது ஆனையிறவு, ஓமந்தை உட்பட நான்கு இடங்களில் பயணிகளை இறக்கி அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் இராணுவச் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. மேலும், மன்னார் செல்லும் வீதி, மட்டக்களப்பு செல்லும் வீதிகளிலும் பல இடங்களில் இந்தச் சோதனைகள் நடக்கின்றது. இந்தகைய சோதனை நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தை தாண்டிய பின்னர் இடம்பெறவில்லை. அத்துடன், தெற்கில் இத்தகைய இறுக்கமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை, சோதனைச் சாவடிகளும் அமைக்கப்படவில்லை என்று அங்கு சென்று வந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உண்மையில் இதனை தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட செயல்பாடு என்றே எண்ண வேண்டியிருக்கின்றது. தமிழர் பகுதிகளில் மட்டும் பயணச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் இவர்கள் எதனைச் சாதிக்கப் போகின்றனர். நாட்டின் அனைத்து மாகாணத்திலும் இந்நடைமுறை இருக்குமாயின், பொதுவான பாதுகாப்புச் செயல்பாடு என்று அதனை நாமும் ஏற்றுக்கொள்வோம். ஆனால், இங்கு நிலைமை வேறாகக் காணப்படுகின்றது. அதிக குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற தெற்கில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளது. அப்படியாயின், பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டிராத பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு நடவடிக்கையை ஏன்? தீவிரமாக்க வேண்டும்!.

தாக்குதல்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு எதிராக புலனாய்வு வேலை பார்த்து முக்கியமான சம்பவங்களை புலனாய்வு செய்வதில் கோட்டைவிட்டு பெரும் தாக்குதலை தடுக்க தவறிய அரசாங்கம், மீண்டும் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டு பாதுகாப்புத் தவறைச் செய்ய முயற்சிக்கின்றதா?. அரசு இதனை திட்டமிட்டுச் செய்கின்றதாயின் அது பாதுகாப்பு படைகள் மீதான தமிழர்களது வெறுப்பை அதிகரித்துக் கொள்ளும் செயலாகவே அமையும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் புலனாய்வுத்துறையினர், பாதுகாப்புப் படையினர் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டிருந்த போதிலும் நாட்டுக்குள் புதிதாக வளர்ந்திருக்கும் சர்வதேச பயங்கரவாதத்தை அழிக்க நாட்டின் புலனாய்வுத்துறையை கட்டமைத்து பாதுகாப்பத்துறையினரை பலம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்று தமிழர்கள் மனதளவில் முணுமுணுத்தனர். ஆனால், இந்த அரசாங்கம் அத்தகைய எண்ணங்களை எமது மனங்களில் இல்லாமல் செய்து இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று கூறும் செயல்களில் தம்மை தொடர்ந்தும் ஈடுபடுத்துவது கவலைக்குரிய விடயமாகும்.

எவனே, வடக்கில் பாதுகாப்பு நடைமுறைகள் ஏன் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தொடர்பில் உரிய விளக்கத்தை வழங்கி, அசௌகரியத்திற்குரிய பாதுகாப்புச் சோதனைகளை தளர்த்திக் கொள்ள அரசாங்கம் சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அட்டக்குமுறைகளை கைவிட்டு முழு நாட்டையும் பாதுகாக்க பொறுப்புவாய்ந்த முறையில் செயற்பட வேண்டிய தருணம் இது என்பதை பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி உணர்ந்துகொள்ள வேண்டும்.

25.05.2019
#பிரகாஸ்
Read More