"இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தின் தாக்கம் தமிழரை பாதிக்குமா?" - ஞா.பிரகாஸ் (ஊடகவியலாளர்)

Search This Blog

Saturday, May 4, 2019

"இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தின் தாக்கம் தமிழரை பாதிக்குமா?"



யிர்த்த ஞாயிறு அன்று இலங்கையை இரத்தத்தினால் தோயச் செய்த கொடிய சர்வதேச பயங்கரவாதத்தினால் எமது நாட்டின் மூவின மக்களுடன் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். இந்தத் கொடூரத்தை நிகழ்த்திய இஸ்லாமிய அரசு (IS) எனப்படும் பயங்கரவாதிகளுடன் இணைந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) அமைப்பின் பயங்கரவாதிகள் இரகசியமான முறையில் அரசிற்கு சவால் விடுக்கும் வகையில் பொலிஸார் இருவரை படுகொலை செய்து அந்தப் பழியினை முன்னாள் போராளிகளின் பக்கம் திருப்பிவிட்டு, தமது பாரிய மக்கள் அழிப்பு திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.

இந்தத் பயங்கரவாதத்தின் தொடக்கம் தமிழ் மக்களுக்கு பாதகமாக இருந்தது, பயங்கரவாதம் வெளிப்பட்ட பின்னைய சூழ்நிலைகளும் கூடுதலாக தமிழர்களுக்கு பாதகமாக அமையலாம் என்று ஊகித்துக் கொள்ள முடிக்கின்றது. ஏன், இதனைச் சொல்கிறேன் என்றால் வடக்கு, கிழக்கில் எது நடந்தாலும் தமிழர்கள் மீது, முன்னாள் போராளிகள் மீது சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் குறுகிய மனநிலைதான் இந்த ஆட்சியிலும், பாதுகாப்பதுறையினரிடமும் இருந்தது. இதன் விளைவு, இப்போது வவுணதீவு படுகொலையை தாம் தான் செய்தோம் என்று பயங்கரவாதிகள் ஒத்துக் கொள்வதற்கு (வெளிப்படுத்த) முன்னர், முன்னாள் போராளிகள் மீது பழி சுமத்தப்பட்டது. அது, தமிழ் மக்களையே பாதித்தது.

அது, தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான 4 பிள்ளைகளின் தந்தையை ஒருசில வாரம் குடும்பத்திற்கு காட்டாமல் விசாரணை செய்தனர். தனது கணவனுக்காக "அவர் குற்றம் செய்யவில்லை" என்று பிள்ளைகளுடன் போராடிய அப்பாவிப் பெண்ணுக்கு இரக்கம் காட்டப்படவில்லை. உண்மை நிலையை பொலிஸாரோ, சிஐடியினரோ கண்டுபிடிக்கவில்லை. அன்றே கண்டுபிடித்திருந்தால் இரத்த வெறியாட்டம் தடுக்கப்பட்டும் இருக்கும். ஆனால், இரத்த வெறியாட்டமும் நடந்து முடிந்த பின்னர் தான் அனைத்து உண்மைகளையும் அரசு அறிகின்றது, நான் உட்பட மக்களும் உணர்ந்துள்ளனர்.

இதேபோல், வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இனிமேல் காலத்தில் முன்வைப்பது அல்லது அதனை அரசு நிறைவேற்றுவது கூட சிக்கல் மிகுந்ததாகவே இருக்கும். இந்த இஸ்லாமியப் பயங்கரவாதம் குறுகிய காலத்திற்குள் அழிக்கப்பட்டாலும் எதிர்கால பாதுகாப்பிற்காக இராணுவ இருப்பு தேவையானதாக கருதப்படும் (வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல அனைத்து மாகாணத்திற்கும்). இதனை, பயன்படுத்தி வடக்கில், கிழக்கில், அதிக இராணுவத்தை வைத்திருக்க அரசு முயற்சிக்கும். இது, கூட தமிழர்களுக்கு பாதகமான நிலையினை ஏற்படுத்தும் (ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது). என்னைப் பொறுத்தவரை போருக்கு முந்தைய காலத்தில் இருந்தது போல் தேவையான இராணுவத்தினரை ஒரே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும். அது, இனி சந்தேகத்திற்குரியதே. அவ்வாறு, இராணுவத்தை நிலை நிறுத்திவிட்டு, பொலிஸ், இராணுவம் போன்ற பாதுகாப்பு தரப்பினரின் புலனாய்வுத் துறையை வலுப்படுத்த வேண்டும். அதனை, உரிமைகளை, நீதியை கேட்டு போராடும் அப்பாவிகளுக்கு எதிராக பயன்படுத்த முனையாமல், இன, மத முறுகல் ஏற்படுத்தும் அல்லது தீவிர போக்குடைய அமைப்புக்கள், குழுக்கள், நபர்கள், அரசியல்வாதிகள் குறித்து கண்காணிக்கச்செய்யலாம்.

இப்படி, தமிழர்களுக்கு எதிராக திரும்பப் போகும் பல விடயங்களை சுட்டிக்காட்டிக் கொண்டே போகலாம். மதத்தை வைத்து உலக மக்களின் இரத்தம் குடிக்க விரும்பிய அபு பக்ர் அல் பக்தாதி என்பவனின் இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதம் இலங்கையின் பக்கம் திரும்பியதால் "30, ஆண்டுகள் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டுப் போய் இன்னமும் அதில் இருந்து மீள முடியாமால் போராடிக் கொண்டிருக்கும் இச்சிறிய நாட்டை மீண்டும் பின் நோக்கி நகர்த்தியிருக்கின்றது". அல்லது அந்தக் போரின் தாக்கத்தை விட பெரும் தாக்கத்தை இந்நாடு சந்தித்திருக்கின்றது. மேலும், பல்வேறு, மத, இன முரண் பாடுகளுக்குள் சிக்கிய நிலையிலும் மூவினங்களுக்கு இடையில் காணப்பட்ட குறிப்பிட்ட அளவிலான நல்லிணக்கமும் சிதைக்கப்பட்டுள்ளது. அனைத்து இனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமைந்திருக்கின்றது.

நிற்க,

இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்திற்கு அடிவேராக இருந்து தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே தீவிரவாதிகள் போல் ஏனைய இனத்தவர்கள் எண்ணிக் கொள்ளும் நிலையை இந்தச் சர்வதேச பயங்கரவாதம் ஏற்படுத்தியிருக்கின்றது. "பயங்கரவாதிகளை தாக்குதல்களுக்கு முன்னரே முஸ்லிம் மக்கள் அரசுக்கு வெளிச்சமிட்டு காண்பித்தனர். அதற்கு, பின்னர், தாக்குதலை நடத்தவிருந்த பயங்கரவாதிகளை காட்டிக் கொடுத்து பெரும் அழிவை தடுத்தனர்". இப்படி, நாட்டிற்காக அவர்கள் உதவியிருந்தாலும் அவர்கள் மீதான பழிச்சொல் உடனடியாக இல்லாமல் போகவும் வாய்ப்பில்லை. ஆக, மொத்தத்தில், இந்தச் சர்வதேச பயங்கரவாதிகளும், அதனுடன், இணைந்த இலங்கையர்கள் சிலரும் இந்தச் சிறு நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு தள்ளிவிட்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

எப்படியேனும், நாட்டிக்குள் நுழைந்துள்ள இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தினை முற்றுமுழுதாக ஒழித்து, மீண்டும் இப்படியொரு சர்வதேச தீவிரவாதத்தை நாட்டுக்குள் உள்நுழைய விடாமல் நாட்டை பாதுகாத்து, மூவினங்கள் இடையிலும் நல்லுறவை ஏற்டுத்தி, வெளி நாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்கி நாட்டை மீண்டும் முன்னோக்கி கொண்டு செல்லவும், இதையே சாட்டாக வைத்து தமிழர்களுக்கு எதிராக செயற்படாமல் இருக்கும் வகையிலான வழிமுறைகளை அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளை, திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும். அதுவே, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல சிறந்த முயற்சியாகும்.

04.05.2019
#பிரகாஸ்