"பயங்கரவாதச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக திரும்பும் போது மகிழ முடியுமா?"எமது நாட்டுக்குள் ஏற்றுக்கொள்ள முடியாத இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதிகளின் பயங்கரவாதம் நடந்தேறியிருக்கும் நிலையில் அதனை அடியோடு அழிப்பதற்காக அரசும், பாதுகாப்பு படையினரும் அவசரகாலச் சட்டத்தின்படி, பயங்கரவாத தடை சட்டத்தையும் உள்ளடக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். பயங்கரவாத தடை சட்டம் தமிழர்களுக்கு புதுமையானது கிடையாது. 30 ஆண்டுகள் அதனால் பாதிக்கப்பட்டனர். அதன்பின்னரும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இன்று, புதிதாக நாட்டுக்குள் நுழைந்த பயங்கரவாதம் அதனை மீண்டும் முழுமையாக அமுல்படுத்தச் செய்திருக்கின்றது.

தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் முஸ்லிம் மதம் சார்ந்தவர்களாக இருப்பதால் இந்த அவசகால நிலைமையில் பயங்கரவாதச் சந்தேக நபர்கள் உட்பட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களும் கைது செய்யப்படப் போகின்றனர். (கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்). இது, தவிர்க்க முடியாததாகும் அன்று தமிழர்களையும் அவ்வாறு தான் கைது செய்தார்கள். அந்நிலை இன்று முஸ்லிம் இளைஞர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அதில், மீண்டும் தமிழர்களும் சிக்கிக் கொள்ளும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

அன்று பயங்கரவாத தடை சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்யப்பட்ட தமிழர்கள் பலர் இன்றும் அரசியல் கைதிகளாக சிறைகளில் இருக்கின்றனர். அதுபோல், முஸ்லிம்களும் பாதிக்கப்படப்போகின்றர் அந்த விளைவை தமிழர்கள் (நாங்கள்) உணர்ந்து கொண்டவர்களாகவே இருப்(போம்)பார்கள். பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும். அதன்காரணமாக, பயங்கரவாதத்துடன் தொடர்புபடாத முஸ்லிம் இளைஞர்கள் பாதிக்கப்படப் போவதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அதில், மகிழ்ச்சியடையவோ மாட்(டார்கள்)டோம். இனவாதம் கொண்ட சிலர் அதில் விதிவிலக்காக இருக்கலாம்.

ஆனால், அதனை முஸ்லிம் சமூத்தை சேர்ந்த சிலர் உணர்ந்து கொள்ளாமல் இந்தச் சூழ்நிலையில் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் சிக்கிக் கொள்வதில் மகிழ்ச்சியடைவது போல் உணர முடிகின்றது. ஆம், முகநூலில் காணப்படும் அவர்களில் இனவாத சிந்தனையில் ஊறியிருக்கும் சில நபர்கள். அண்மையில் "மாவீரர்களின் படங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதை" வைத்து மகிழ்சியடைந்ததை காணமுடிந்தது. மேலும், அவர்களிடம் ஆயுதம் இருந்ததாகவும் போலியாக தமது இனவாத எதிர்ப்பைகாட்டிக் கொண்டனர்.

அது, உண்மையில் மிகக் கேவலமான இனவாதச் சிந்தனையாகும். அத்தகைய நபர்கள் தான் (கடந்த காலத்தில் நடந்த உள்நாட்டு போரில் அரசுக்கு எதிராக போராடியவர்களை, அந்தப் போராட்டத்தை கைகாட்டி) இப்போது, நடந்த பெரும் கொடூர பயங்கரவாதத்தை மனதளவில் நியாயப்படுத்துவது போல் இனவாதம் கக்கிக்கொண்டிருக்கின்றனர். இப்படியான நபர்களை முஸ்லிம் சமூகம் எதிர்க்க வேண்டும். (அவர்களின் வாய் வீரத்தின் எதிர்வினைகள் உங்களையே பாதிக்கும்). அவர்களது இனவாத சிந்தனைகளை, பகைமை உணர்வை முறியடிக்க வேண்டும் (இப்படி, எம்மத்தியில் இருத்து இனவாதம், பகைமை உணர்வை விதைப்பவர்களை நாங்கள் எதிர்த்து அவர்களது சிந்தனைகளை முறியடிக்கப் பார்க்கின்றோம்). ஆனால், முஸ்லிம்களில் குறிப்பிட்ட அளவிலானோரை தவிர அவர்களை எதிர்க்க அனைவரும் முன்வந்ததாக தெரியவில்லை. எனினும், முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட செய்திகளை (வெறும் செய்தியாக) பதிவிட்டால் "போலியாக எழுதப்படுகின்றது" என்று சிலர் வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றனர். அப்படியான நபர்களை எனது செய்தி பதிவுகளிலும், பிற ஊடகச் செய்திகளின் கீழும் காணமுடியும். அவர்களை போன்ற சிலரின் தேவைகள், தூண்டுதல்கள் காரணமாகவே இலங்கையில் இருந்தவர்கள் மூலைச் சலைவையார்களிடம் அகப்பட்டு பயங்கரவாதிகளாக மாறி நாட்டையே அழித்து சுடுகாடாக்க முயன்றுள்ளனர் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதிற் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஆயுதமற்று அல்லது சந்தேக நபர்களாக எவராவது கைது செய்யப்பட்டால் கூட அவர்களுக்கான விடுதலை என்பது உடனடியாக நடக்கக்கூடிய விடயம் கிடையாது. வவுணதீவு பொலிஸார் படுகொலை வழக்கில் இப்போது நிரபராதியாக காணப்படும் முன்னாள் போராளி கூட விடுதலை பெறமுடியாமல் இருக்கின்றார். காரணம் அச்சட்டத்தின் விதிகளாகும். சட்டமா அதிபர் அல்லது பாதுகாப்பு செயலாளர் விரும்பினால் மட்டுமே விரைவான விடுதலை சாத்தியமானதாகும்.

யாழ் பல்கலைக்கழத்தில் காலம் காலமாக மாவீரர்களை நினைவு கூருதல் நடைபெற்றுக் கொண்டுதான் இருகின்றது. அது, மீண்டும் அவர்கள் வர வேண்டும் என்பதற்காக இல்லை. அவர்களது தியாகத்தை என்றும், எப்போதும் மெச்சுவதற்கு மட்டுமே என்பதை அரசும் அறியும் மற்றும் அனைவரும் அறிவார்கள். தடையை மீறியே அது நடைபெறுகின்றது ஆனால், அப்போதெல்லாம் அமைதியாக இருத்துவிட்டு (குண்டு தாக்குதல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது). இச்சந்தர்ப்பத்தில் அரசு நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதால் தமிழ் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். "மாவீரர்களின் படங்கள் காணப்பட்டதால், பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர், செயலாளர் இருவரும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்டனர். ஆனால், "தற்கொலை குண்டுதாரி ஒருவரின் தொழிற்சாலை ஊழியர்களான உளவாளிகளாக செயற்பட்டதாக கூறப்படும் 9 சந்தேக நபர்கள் பயங்கரவாத தடை சட்டத்திற்கு கீழ் கொண்டுவரப்படாமல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது மிகச் சரியாக இருக்கும்.

எனவே, இச்சட்டத்தில் தெரிந்தோ, தெரியாமலோ அப்பாவிகள் (அது, தமிழராக, முஸ்லிமாக, சிங்களவராக இருந்தாலும் சரி) சிக்கிக்கொள்ளும் போது அவற்றில் குளிர்காய முனைவது மனித நாகரீகம் கிடையாது என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்பாவிகளுக்காக குரல் கொடுத்தவாறே, "இரத்தம் குடிக்கும் கொடூர பயங்கரவாதம் வேரோட அழிக்கப்பட்டு, உண்மையான பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்" எனும் நிலைப்பாட்டில் மூவின மக்களும் உறுதியுடன் இருக்க வேண்டும். "தத்தமது, குறுகிய, இன, மத பகைமைகளை" சர்வதேசப் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை மறந்துவிடுவதே சிறந்தது!.

07.05.2019
#பிரகாஸ்

Comments

Popular posts from this blog

"கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிக்கும் மின்னல்"

"இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தின் தாக்கம் தமிழரை பாதிக்குமா?"