வன்முறைப் போக்கு சிறுவர் மட்டத்திற்கு மாறுகின்றதா? - ஞா.பிரகாஸ் (ஊடகவியலாளர்)

Search This Blog

Sunday, June 16, 2019

வன்முறைப் போக்கு சிறுவர் மட்டத்திற்கு மாறுகின்றதா?

இளைஞர்களிடையில் காணப்பட்ட அடிதடி வன்முறைப் போக்கு இப்போது மெதுமெதுவாக அவர்களிடமிருந்து சிறுவர்கள் மட்டத்திற்கும் மாறிச் சென்று கொண்டிருப்பதை அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஹட்டன் - தரவலைப் பகுதியில் அண்மையில் கிரிக்கெட் போட்டி ஒன்றின் பின்னணியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சிறுவர்கள் உட்பட இளைஞர்கள் சிலருக்கு இடையில் சிறிய அடிதடி வன்முறைச் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. அதில், கல்லினால் தாக்கப்பட்ட இரு இளைஞர்கள் காயமடைந்திருந்தனர். இது தொடர்பில் ஐந்து சிறுவர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின் சிசிடிவி காணாெளி எனக்கு கிடைத்திருந்தது. முதலில் தாக்குதலை சிறுவர்களே தொடக்கினர் என்பதை அவதானிக்க முடிந்தது. உண்மையில் இது மிகவும் வேதனைக்குரியது. இளைஞர்கள் பதிலுக்கு கற்களை கொண்டு தாக்கிய போதும், அவர்களைச் சிறுவர்கள் என்பதால் தாக்குவதில் தயங்கியதையும் அதன்போது காணமுடிந்தது. இல்லையேல் அது பெரும் ஆபத்தில் முடிந்திருக்கலாம்.

கல்வி கற்கும் வயதில் சிறுவர்களிடம் இத்தகைய வன்மச் சிந்தனை வளர்வதும், அதனைச் செய்து முடிப்பதும் அவர்களின் எதிர்காலத்தை மிக மோசமாக கேள்விக்குள்ளாகும் விடயமாகும். இந்தகைய போக்கை இப்போதே சிறுவர்களிடத்தில் இருந்து களைந்தெடுக்க வேண்டிய தேவை அவசியமானதாகும்.

அண்மைக்காலமாக நாட்டில் சிறுவர்கள் இப்படியாக வழிதவறிச் செல்வது அதிகரித்திருப்பதை என்னால் உணர முடிகின்றது. பாலியல் துஷ்பிரயோகம், வாள் வெட்டு வன்முறை, குழு மோதல் என்று சில தவறான பாதையில் 18 வயதிற்கு கீழ் காணப்படும் சிறுவர்கள் தடம்மாறிச் செல்வது போன்ற சம்பவங்கள் அங்காங்கே நடைபெற்றுள்ளன. அதனுடன் ஒன்றாகவே இச்சம்பவமும் நடைபெற்றுள்ளது. ஆனால் இதில் 10 வயது வரையில் இருக்கக்கூடிய சிறுவர்களும் பங்குபற்றியிருப்பது தான் கவலை தருவதாக அமைந்துள்ளது.

இச்சிறுவர்கள் சரியான முறையில் பாடசாலைக்கு செல்வதில்லை என்று அங்கிருக்கும் இளைஞர் ஒருவர் என்னிடம் கூறியிருந்தார். இதுவும் சிறுவர்களை தவறான பாதையில் வழிநடத்தக் கூடிய சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தும் ஒன்றே. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களும் சிந்தித்து செயற்பட வேண்டிய தேவையை இச்சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.

எனவே, பெற்றோர் தமது பிள்ளைகளின் செயற்பாடுகளை உண்ணிப்பாக அவதானிப்பதுடன், ஆசிரியர்கள் தமது மாணவர்களின் வருகை தொடர்பிலும், அவர்களது போக்கு குறித்தும் கரிசனை கொண்டு அது தொடர்பில் சரியான வழிநடத்தல்களை செய்ய வேண்டும். அதேபோல் இளைஞர்கள் அதாவது சிறுவர்களாக இருக்கும் மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் சரியான முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவற்றை செய்தால் வன்முறை போக்கில் செல்லும் சிறுவர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பது எனது கருத்தாகும்.

ஆனால், காலமும், மனிதர்களும் மாறிவிட்ட இக்காலகட்டத்தில் தமது மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் கரிசனை செலுத்த வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றது. காரணம், மாணவர்களை திருத்த வேண்டும் எனும் நோக்கில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் செயற்பட்டால், மாணவர்களின் பெற்றோர் அது தொடர்பில் கடுமையாக கடிந்து கொள்ளும் போக்கு காணப்படுகிறது. அதனால் ஆசிரியர்கள் தமது போக்கிலேயே இருத்துவிடுகின்றனர்.

அதுமாற வேண்டும், இளைஞர்கள் சிந்திக்க வேண்டும், பெற்றோர் பிள்ளைகள் குறித்து அக்கறையாக இருக்க வேண்டும். அதேபோல், சிறுவர்கள் தொடர்பிலான அதிகாரிகளும் இவற்றில் இருந்து சிறுவர்களை மீட்கும் நடவடிக்கைகளை அல்லது பாதுகாக்கும் வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும் "மாணவர்கள் எதிர்காலத் தலைவர்கள்" என்று சொல்லப்படும் கூற்றை எப்போதும் சரியான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டுமாயின். தடம்மாற முனையும் சிறுவர்களை தலைவர்களாக மாற்றும் முன்னுதாரணப் புருசர்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்!.

14.06.2019
#பிரகாஸ்