சிந்தனையில் இனவாதம் இருந்தால் எதுவும் இனவாதமே

முகநூலில் காணப்படும் குறிப்பிட்ட ஒருசிலர் நான் பதிவிடும் செய்திகளை வைத்து என்னை இனவாதியாக சித்திரிக்க முயற்சிப்பதை அண்மைக்கலமாக அதிகம் அவதானித்து வருகின்றேன். அண்மையில் "ஊடக விபச்சாரி" என்று பெயர் தந்தனர். நேற்று முன்தினம் ஒருபடி மேல் சென்று "இவன் எல்லாம் ஊடகவியலாளனா" என்று இழிவுபடுத்தியிருக்கின்றனர்.

எனது முகநூலில் நான் எனக்கு கிடைக்கும் மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள், இணையத்தளம் மூலம் பெறும் பலதரப்பட்ட செய்திகளை சேகரித்த தகவல்களை கொண்டு உறுதி செய்து பதிவிட்டு வருகின்றேன். சில சந்தர்ப்பங்களில் தவறான செய்தியை பதிவிட்டால் கூட உண்மையை அறியும் போது அதனை மீளச் சுட்டிக்காட்டவும் செய்கிறேன். எழுதிய செய்தியில் இடம், விபரம் அல்லது வேறு விடயங்கள் தவறாக இருந்தாலும் அதனை சுட்டிக்காட்டும் போது அவற்றை அவதானித்து திருத்திக் கொள்வேன்.

ஆனால், முஸ்லிம்கள் சம்பந்தப்படும் செய்திகளை நான் எழுதினால் அவர்களைச் சார்ந்த சிலர் என்னை இனவாதியாக்கும் முயற்சிகளை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றனர். கைது இடம்பெற்றால் சந்தேகநபரின் பெயர், தேடுதல் அல்லது சம்பவம் நடந்த பகுதி - அண்டிய இடம் இவற்றை குறிப்பிட்டால் அதனை இனவாதம் என்கிறார்கள். அதில் சுகம் இருக்கின்றது என்கின்றனர். ஒருவேளை, தவறுதலாக மேலதிக தகவலை உள்ளடக்காவிட்டாலும் அதனைக்கூட இனவாதம் எனச் சொல்லி தமது மனங்களில் இருக்கும் அழுக்கை என் மீது அள்ளி வீசுகின்றனர்.

எனது செய்திகளை பார்க்கும் அனைவரும் இதனை அறிவார்கள். இதற்கு காரணம் இத்தகைய சிலரின் மனம் இனவாத எண்ணங்களினால் நிறைந்து போயிருப்பதுதான். குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான கைது நடவடிக்கை தகவல்களை பொலிஸ் ஊடகப் பிரிவே அறிவிக்கின்றது. அதன்மூலம், கைது செய்யப்படும் நபர்களின் விபரங்களையும் நாம் அறிய முடியும். அதனையே செய்திகளாக எழுதுகிறோம். அதேபோல், செய்தியாளர்களினால் சேகரிக்கப்படும் செய்திகளாக இருப்பின் அவற்றில் கூடுதல் தகவல் இருக்காது. அவர்கள் தமது ஊடகங்களும் ஆறுதலாக அறிக்கையிடும் போதே முழுமையான தகவல்களை கொடுப்பார்கள். இதுபற்றி எல்லாம் அவர்களிடம் புரிதல் கிடையாது. கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு செய்தியில் பொலிஸ் பிரிவை கூறாமல் எழுதிய போது அதனை இனவாதம் என்றார்கள். இதே ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு செய்தியில் கைது எப்படி நடந்தது என்பதை கூறவில்லை என்று அதற்கும் இனவாதச் சாயம் பூசினார்கள். இப்போது, முஸ்லிம்கள் சார்ந்த எந்தச் செய்தியை எழுதினாலும் இனவாதி என்று கூறி எனது நட்பில் இல்லாத நபர்களையும் எனக்கு எதிராக தூண்டிவிடுகின்றனர்.

உண்மையில் நான் எந்தச் செய்தியாக இருந்தாலும் கிடைக்கும் தகவல்படி மட்டுமே எழுதிவிட்டுச் செல்கிறேன். இன, வன்முறைகள் நடக்கும் சந்தர்ப்பங்களில் எனது செய்திகளை, அதன் கீழ் வரும் கமெண்ட்களை கவனமாக கையாளுகிறேன். ஆனால், இனவாதிப்பட்டம் வழங்கி என்னை, என் அடையாளத்தை இழிவுபடுத்துகின்றனர். முஸ்லிம்கள் சம்பந்தப்படும் செய்தியை எழுதினாலே அதனை இனவாதம், இவன் இனவாதி, இவனுக்கு இவற்றில் ஆனந்தம் என்று பிதற்றிக் கொள்கின்றனர். நேற்றும் ஒரு பதிவில் புரிதல் இன்றி இனவாதி என்றார்கள். இதில், வேடிக்கை என்னவென்றால் ஒருவர் எனது செய்தியை அல்லது எனது கருத்துப் பதிவு ஒன்றை பார்த்து "இனவாதத்தில் எழுதுகிறாய்" என்று கமெண்ட் அடிக்கும் போது அந்த ஒற்றைக் வசைபாடலை வைத்து மேலும் பலர் வந்து எழுதப்பட்டது என்ன என்பதை கூட பாராமல் இனவாதப் பட்டம் கட்டும் செயலும் நடைபெறுகின்றது.

அத்தகையை இனவாதச் சிந்தனையாளர்களை நோக்கி நான் ஒன்றைக் கூறுகிறேன் "இனவாதத்தில் செயற்பட வேண்டுமாயின், முஸ்லிம் நபர்களின் சில செயல்களை இனவாதப் பேச்சினால் எதிர்க்கும் சராசரி தமிழனாய், எதையும் இனவாதமாகச் சிந்திக்கும் - இனவாதம் கக்கும் உங்களைப் போல் என்னாலும் வெளிப்படையாக இனவாதத்தில் செயற்பட முடியும். நீங்கள் நினைப்பது போல் அதனை செய்திகளில் மட்டும் காண்பிக்க அவசியமில்லை" ஆனால், நான் ஒருபோதும் இனவாதத்தில் செயற்பட முயற்சித்ததில்லை. இனமுரண்களை வழிவகுக்கும் பிரச்சினைகளில் நடுநிலை தேடும் ஆளாக செயற்படும் போது என் இனவத்தவர்கள் கூட என்னை முஸ்லிம்களுக்கு அதிகம் ஆதரவு கொடுப்பவன் என்று விமர்சித்ததுண்டு.

"07.03.2018 அன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இருக்கக் கூடிய ஆரயம்பதி பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகளின் சுலோகத்துடன் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டது" என்ற செய்தியை எழுதியதில் இருந்து என்னை இனவாதியாக சித்திரிக்கும் முயற்சியில் குறிப்பிட்ட சிலர் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். அண்மைய நாட்களில் இனவாதம் பரப்பியவர்கள் கைது செய்யப்பட்ட போது என்னை சுட்டிக்காட்டி எனக்கும் அப்படி நடந்தால் அவர்களது மனம் எந்தளவிற்கு குளிரும் என்பதை கூட வெளிப்படையாக காட்டினார்கள்.

அப்போதெல்லாம் நான் அமைதியாக இருந்தேன் பொறுமையாகவும் இருந்தேன் ஆனால் என்னை இனவாதியாக காண்பிக்கும் - இழிவுபடுத்தும் முயற்சி தொடர்ச்சியாக நடப்பதால் பொறுமை இழந்துவிட்டேன். உண்மையிலேயே இனவாதியாக மாறிவிடலாமோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. எனினும், பொறுமை இழந்தாலும் எனக்கென்று நான் ஏற்படுத்திக் கொண்ட பாதையை அவர்களுக்காக மாற்றப்போவதில்லை. இனவாதச் சிந்தனைகளில் செயற்படும் நபர்களை இனியும் தனிப்பட்ட மரியாதை நிமித்தம் நட்பில் வைத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். எனவே, என்னை இனவாதியாக, ஊடக விபச்சாரியாக நினைப்பவர்கள் நீங்களாகவே நட்பில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.

"ஐந்துரூபாய் போன் இருந்தால் நீயும் ஊடகவியலாளன்" என்று என்னை மனதில்வைத்து பொதுவாக பதிவிடப்பட்டிருந்த பதிவு ஒன்றை நேற்றுப்பார்த்தேன். உண்மைையைச் சொன்னால் நான் கைபேசியையும், முகநூலையும் பயன்படுத்தியிருக்கா விட்டால் இன்று ஊடகவியல் திறமை அல்லது ஊடகவியலாளன் என்று சொல்லும் அடையாளம் கிடைத்திருக்காது. இவையிரண்டும், இருந்ததால் தான் அது முடிந்துள்ளது. என்னை ஊடகவியலாளன் ஆக வளர்த்துவிட்டது இந்த முகநூலும், இதில் கிடைத்த நண்பர்களும், என் மீதான கேலிகளுமேயாகும். நான் ஊடகவியலாளன் எனும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டிருக்கவில்லை. அதற்குரிய அத்தனை தகுதிகளையும் நான் வளர்த்துக் கொண்டேன். ஆனால், "அசாம் அமீன், சத்துர போல் இலங்கையில் பிரபலமான, அமெரிக்கா ஆக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் கற்ற ஊடகவியல் தர்மத்தை மீறாத ஊடகவியலாளர் பிரகாஸ்" என்று மிகவும் இழிவாக கேலி செய்கின்றனர்.

தம்மை மட்டுமே பெரும் தகுதி கொண்டவர்களாக எண்ணிக் கொண்டு அடுத்தவனை இழிவாக நினைக்கும் மனநிலை கொண்டவர்களின் இழிசொல்லுக்கு நான் கலங்கப் போவதில்லை. நான் அசாம் அமீனும் இல்லை பிரகீத் எக்னெலிகொடவும் இல்லை நிமலராஜனும் இல்லை என் திறமைக்கு, தகுதிக்கு உட்பட்ட சாதாரண ஒரு ஊடகவியலாளன் மட்டுமே. நான், அதிகம் படிக்காத, ஊடகம் கற்றுக் கொள்ளாத ஊடகவியலாளன் என்பதை கர்வமாக கூறுவேன்.

04.06.2019
#பிரகாஸ்

Comments

Popular posts from this blog

"கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிக்கும் மின்னல்"

"பயங்கரவாதச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக திரும்பும் போது மகிழ முடியுமா?"

"இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தின் தாக்கம் தமிழரை பாதிக்குமா?"