மரண தண்டனை - ஞா.பிரகாஸ் (ஊடகவியலாளர்)

Search This Blog

Friday, June 28, 2019

மரண தண்டனை


அண்மைக்காலம் முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையை நிறைவேற்றியே தீருவேன் என்று கூறிக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

தீவிர பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருட்களை இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்து இளைய சமுதாயத்தை அழிக்கும் கயவர்களான போதைப் பொருள் கடத்தல்காரர்களை தூக்கிலிட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், இலங்கையின் சட்டம் காணப்படும் நிலையை பார்த்தால் தற்போது மரண தண்டனையை நிறைவேற்றவேது பொருத்தமற்றதாகவே இருக்கும்.

ஆரம்பத்தில், போதைப் பொருள் தொடர்பிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி கூறியபோது சரியான முடிவு என்றே கருதினேன். எனினும், எனது நண்பர் ஒருவர் "சட்டம் மற்றும் நீதித்துறை சரியாக இல்லாத நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றுவதை அனுமதிக்க முடியாது" எனக்கூறினார். அவரது கூற்றுப்படி சிந்தித்தபோது அது சரிதான் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இலங்கையின் நீதித்துறை எத்தகைய நிலையில் இருக்கின்றது என்பதை தமிழர்களுக்கு கிடைக்கப்பெறாத நீதியைவைத்து, காவல்த்துறையினரின் செய்பாடுகளை வைத்தும், நாம் முடிவுகட்டிவிடலாம். அவ்வாறானதொரு நிலையில் மரண தண்டனையை நிறைவேற்றுவார்களாயின் பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்களை தவிர்த்து சிறியளவிலான கடத்தல்களில் ஈடுபட்டவர்களை தூக்கிலிட்டு நாட்டு மக்களை ஏமாற்றும் நிலமையும் ஏற்படக்கூடும்.

முழுமையாக வழக்கு முடிவுறுத்தப்பட்ட நிலையில் மரண தண்டனை கைதிகளாக உள்ள போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 21 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அதில், தமிழர்கள் சிலரும் உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியது. அத்துடன், மிக முக்கியமான பிரதான போதைப் பொருள் கடத்தல்காரர்களின் பெயர்கள் வழக்கு முழுமையாக நிறைவுற்றிராத காரணத்தினால் இடம்பெறவில்லை.

அவ்வாறானதொரு நிலையில், பாரிய போதைப் பொருள் கடத்தல் மன்னர்களை விடுத்து, சிறிய கடத்தல்காரர்களை தண்டிப்பதால் போதைப் பொருள் கடத்தலை அல்லது வியாபாரத்தை குறைத்துவிட முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே, தற்போது மரண தண்டனை நிறைவேற்றுவதை தவிர்த்து, சட்டம் மற்றும் நீதித்துறையை முழுமையாக சுயாதீனமாக இயங்கும் வகையில் சீரமைத்து (Reform) அதன்பின்னர் மரண தண்டனையை நிறைவேற்றுவதே சிறந்ததாக - நியாயமானதாக அமையும்.

சிறையிலுள்ள போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சிறையில் இருந்தவாறே போதைப் பொருள் கடத்தல்களை செய்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகளே காரணமாக அமைக்கின்றனர் (சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லத்தீப் ஒருமுறை இதனை ஏற்றுக் கொண்டிருந்தார்). சிறைச்சாலை அதிகாரிகளின் உதவி கிடைக்காவிட்டால் அவர்களினால் எதுவும் செய்யமுடியாது. அத்தகைய சூல்நிலையை உருவாக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஆனால், மரண தண்டனையை நிறைவேற்றினால் போதைப் பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி எண்ணுகிறாரோ தெரியவில்லை. உதவி புரிபவர்கள் இருக்கும் வரையில் போதைப் பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்திவிட முடியாது என்பதே உண்மை. ஜனாதிபதி, மரண தண்டனையை நிறைவேற்றினால் சாதாரண போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மட்டுமே அச்சம் கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

இது, இவ்வாறு இருக்கட்டும் ஆனால்,

வன்புணர்வு கொலைகளை புரிந்தவர்களுக்கு இப்போது மரண தண்டனை நிறைவேற்றினால் கூட அதனை ஏற்றுக்கொள்ள முடியும். அதில், சிலவேளைகளில் அப்பாவிகள் சிக்கிக்கொள்ள கூடிய நிலை ஒன்று காணப்பட்டாலும், பாரிய குற்றம், சிறிய குற்றம் என்று பாகுபாடு பார்க்கும் அவசியம் கிடையாது. எனவே, அவ்வாறான குற்றவாளிகளுக்கு இப்போதும் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும். ஆனால், அதனை ஜனாதிபதி செய்யவில்லை. செய்யத் தயாராகவும் இல்லை.

23.02.2019
#பிரகாஸ்