வடக்கில் தீவிர பாதுகாப்புச் சோதனைகள் ஏன்? - ஞா.பிரகாஸ் (ஊடகவியலாளர்)

Search This Blog

Monday, May 27, 2019

வடக்கில் தீவிர பாதுகாப்புச் சோதனைகள் ஏன்?

நாட்டை உலுக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டிருப்பதால் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்று எண்ண முடியாது. எனவே, மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறுவதை தடுக்க தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். ஆனால், அது மக்களுக்கு அச்சத்தையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தாத வகையில் இடம்பெற வேண்டும்.

ஆயினும், இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தில் தேவையற்ற முறையில் அதிகரிக்கப்பட்டிருப்பதை அசௌகரியங்களை எதிர்கொண்டவர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இதனை, தெற்குடன் ஒப்பிடும்போது வடக்கில் கூடுதலாக நடைபெறுவதை உணரமுடிகின்றது. இது குறித்து, நேற்று பாராளுமன்றில், சேனாதிராஜா, டக்ளஸ், சிறிதரன் உள்ளிட்டோரும் அரசை கடுமையாகச்சாடி குற்றம் சாட்டியிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பேருந்தில் பயணம் செய்யும் போது ஆனையிறவு, ஓமந்தை உட்பட நான்கு இடங்களில் பயணிகளை இறக்கி அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் இராணுவச் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. மேலும், மன்னார் செல்லும் வீதி, மட்டக்களப்பு செல்லும் வீதிகளிலும் பல இடங்களில் இந்தச் சோதனைகள் நடக்கின்றது. இந்தகைய சோதனை நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தை தாண்டிய பின்னர் இடம்பெறவில்லை. அத்துடன், தெற்கில் இத்தகைய இறுக்கமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை, சோதனைச் சாவடிகளும் அமைக்கப்படவில்லை என்று அங்கு சென்று வந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உண்மையில் இதனை தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட செயல்பாடு என்றே எண்ண வேண்டியிருக்கின்றது. தமிழர் பகுதிகளில் மட்டும் பயணச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் இவர்கள் எதனைச் சாதிக்கப் போகின்றனர். நாட்டின் அனைத்து மாகாணத்திலும் இந்நடைமுறை இருக்குமாயின், பொதுவான பாதுகாப்புச் செயல்பாடு என்று அதனை நாமும் ஏற்றுக்கொள்வோம். ஆனால், இங்கு நிலைமை வேறாகக் காணப்படுகின்றது. அதிக குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற தெற்கில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளது. அப்படியாயின், பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டிராத பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு நடவடிக்கையை ஏன்? தீவிரமாக்க வேண்டும்!.

தாக்குதல்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு எதிராக புலனாய்வு வேலை பார்த்து முக்கியமான சம்பவங்களை புலனாய்வு செய்வதில் கோட்டைவிட்டு பெரும் தாக்குதலை தடுக்க தவறிய அரசாங்கம், மீண்டும் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டு பாதுகாப்புத் தவறைச் செய்ய முயற்சிக்கின்றதா?. அரசு இதனை திட்டமிட்டுச் செய்கின்றதாயின் அது பாதுகாப்பு படைகள் மீதான தமிழர்களது வெறுப்பை அதிகரித்துக் கொள்ளும் செயலாகவே அமையும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் புலனாய்வுத்துறையினர், பாதுகாப்புப் படையினர் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டிருந்த போதிலும் நாட்டுக்குள் புதிதாக வளர்ந்திருக்கும் சர்வதேச பயங்கரவாதத்தை அழிக்க நாட்டின் புலனாய்வுத்துறையை கட்டமைத்து பாதுகாப்பத்துறையினரை பலம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்று தமிழர்கள் மனதளவில் முணுமுணுத்தனர். ஆனால், இந்த அரசாங்கம் அத்தகைய எண்ணங்களை எமது மனங்களில் இல்லாமல் செய்து இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று கூறும் செயல்களில் தம்மை தொடர்ந்தும் ஈடுபடுத்துவது கவலைக்குரிய விடயமாகும்.

எவனே, வடக்கில் பாதுகாப்பு நடைமுறைகள் ஏன் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தொடர்பில் உரிய விளக்கத்தை வழங்கி, அசௌகரியத்திற்குரிய பாதுகாப்புச் சோதனைகளை தளர்த்திக் கொள்ள அரசாங்கம் சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அட்டக்குமுறைகளை கைவிட்டு முழு நாட்டையும் பாதுகாக்க பொறுப்புவாய்ந்த முறையில் செயற்பட வேண்டிய தருணம் இது என்பதை பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி உணர்ந்துகொள்ள வேண்டும்.

25.05.2019
#பிரகாஸ்