முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறுப்பு வன்முறை


இரத்தம் குடித்து நாட்டை அழிக்க திட்டமிட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல். இன்று மூவினங்களைக் கொண்ட இச்சிறிய நாட்டை மீண்டும் இனக் கலவரத்தினால் கறையான் போன்று அரித்துத்திண்ண ஆரம்பித்திருக்கின்றது. எவராலும், ஏற்றுக்கொள்ள முடியாத சர்வதேச பயங்கரவாதம், இலங்கையில் உள்ளவர்களை வைத்து 258 உயிர்களை குடித்துள்ளது. அது, உட்சபட்ச இனவெறுப்பை தூண்டிவிடும் நோக்கிலேயே பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்டிருந்தது. இரு வாரங்கள் நிலவிய அச்சத்துடனான அமைதி, கடந்த மூன்று நாட்களில் உடைத்தெறியப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தனர் எனும் காரணத்தினால் பெரும்பான்மையின குழுக்கள் சிலவற்றின் இடையில் எழுந்த குரோத சிந்தனையானது, மனதுடன் மட்டுப்பட்டு, சந்தர்ப்பம் வரும் என காத்திருக்கையில், நபர் ஒருவரின் ஒருவரி ஆங்கிலக் கமெண்ட் குரோதத்தை வன்முறையில் காட்டும் வாய்ப்பை இலாவகமாக எடுத்துக் கொடுத்திருந்தது. கவனயீனமாக பஞ்சை நெருப்பின் அருகில் வைத்தால் என்ன நடக்குமோ, அது, இந்தக், கமெண்ட் மூலம் நடந்தேறியுள்ளது.

அப்பாவி முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் கண்டியில் பெரும் இனவெறுப்பு வன்முறை நிகழ்த்தி சொத்துக்கள் சூறையாடப்பட்டது, சில உயிர்கள் பறிபோனது. அதேபோன்று, குண்டு தாக்குதல் பின்னணியில் மீண்டுமொரு முறை இனவெறுப்பு வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் சொத்துக்களும், வாகனங்களும் அடித்து நொருக்கி, தீ வைத்து சூறையாடப்பட்டிருக்கின்றது.

உண்மையில், இத்தகைய இனவெறுப்பு வன்முறைகள் இடம்பெறுவது வேதனைக்குரியது, இத்தகைய இனவெறியாட்டத்தில் சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒருசிலர் இனவாதத்தை கக்கிவிட்டு ஒழிந்துவிட பாரிய வன்முறையாளர்கள் வெளியில் வருகின்றனர், ஏதுமறியாத அப்பாவி மக்களை, தமக்கு எதிரானவர்கள் என்று கருதி, அவர்களது உடமைகளை சூறையாடிவிடுகின்றனர். சில இடங்களில் உயிரையும் பலியெடுத்து தமது வன்மப் பசியை தீர்த்துக்கொள்ளுகின்றனர்.

இப்படியான, வன்முறைகள் நிகழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்புத் தரப்பினரின், அரசின் நடவடிக்கைகள் என்பது அதற்கு சார்பான அல்லது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த தயங்கிக் கொள்வதை உணர முடிகின்றது. நேற்றைய, வன்முறைகளின் போது, சில இடங்களில் வன்முறையாளர்கள் பொலிஸார் முன்னிலையிலேயே சொத்துக்களை சேதமாக்குகின்றனர், பகல் வேளைகளில் துணிவாக ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் பெரும் குழுவாகச் சென்று வீடுகளை தாக்குகின்றனர். பாதுகாப்பு படைகளினால் அவர்களை ஏன்? அடக்க முடியவில்லை. அவசரகாலச் சட்டத்தின் அதிகாரத்திற்கு என்னானது?. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் ஊரை நாசமாக்க எப்படி? முடிகின்றது. அதற்குரிய காரணம் பேரினவாதத்தின் சக்தி எது என்பதை உணர்ந்துகொண்ட அனைவருக்கும் தெரியக்கூடியது தான்.

1983ம் ஆண்டு தமிழருக்கு எதிராக நிகழ்த்திய இனக்கலவரத்தின் வன்செயல்களை. இப்போது, முஸ்லிம்களுக்கு எதிராக இந்தப் பேரினவாதிகள் படிப்படியாக நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். கடந்தகால வன்முறைகளை நிகழ்த்தியவர்களே இப்போதும், இங்கும் தொடர்புபடுகின்றனர். ஆனால், அவர்களுக்கான தண்டனைகள் மட்டும் வளமை போல் காற்றுப் போன பலூன்கள் போலாகி மறைந்துபோய்விடும்.

ஆனால், அப்பாவி முஸ்லிம்கள் சொத்துக்களையும் இழந்து, உயிர்களையும் இழந்து நீதி கிடைக்காதா என்ற ஏக்கத்துடனயே வாழப்போகின்றனர். இத்தகையை நிலைமைகளில் இருந்து மக்களையும், நாட்டையும் மீட்டு, பொருளாதாரத்தை வளர்ப்பதற்குரியவாறு இந்நாட்டு மூவின மக்களையும் இனவெறுப்பு, பேரினவாதம், வன்முறை போக்கில் இருந்த விடுவித்து ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று எப்போது இந்நாட்டு தலைவர்கள் சிந்திப்பார்களோ அன்று தான் இந்நாட்டின் எதிர்காலம் மாறும், மக்களும் மாறுவார்கள்.

14.05.2019
#பிரகாஸ்

Comments

Popular posts from this blog

"கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிக்கும் மின்னல்"

"பயங்கரவாதச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக திரும்பும் போது மகிழ முடியுமா?"

"இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தின் தாக்கம் தமிழரை பாதிக்குமா?"