"ஆமர் வீதி"


பல்சமூகங்கள் காணப்படும் பொது வெளிகளில் ஒரு பிரச்சினை தொடர்பில் எம்மால் முன்வைக்கப்படும் தனிப்பட்ட சிந்தனைகள் அல்லது கருத்துக்கள் என்பது பொதுச்சார்பு, நடு நிலைச்சார்பு, ஒரு நிலைச்சார்பு எதுவாக இருந்தாலும் சரி அதனை காத்திரமான முறையில் சமூக விரோதத்தை ஏற்படுத்தாத வகையில் முன்வைக்கப்பட வேண்டும். அப்படியில்லாமல், முன்வைக்கப்படும் கருத்துக்களை அப்பிரச்சினையை வைத்து அது சார்ந்தவர்கள் மீது காழ்ப்புணரச்சியை அள்ளி வீசும் நோக்கம் கொண்டது எனக் கூறினால் அது மிகைப்படுத்தலாக அமையாது.

அப்படியான, செயற்பாட்டையே முகநூல் பதிவாளர் ஒருவர் "நடமாடும் விலை மாதர்கள்" பற்றிப் பேசுவது போல எம் மலையகச் சொந்தங்கள் மீது சேற்றை அள்ளிப் பூச முயன்று இருக்கின்றார். அது உண்மையில் கண்டிக்கத்தக்க செயலாகும்.

அவரது, பதிவின் கீழ் முன்வைத்த எனது கருத்து, "மலையகத்தில் இருந்துதான் பாலியல் தொழிலாளிகள் உருவாகின்றனர் எனும் மாயையில் மட்டும் இதனை எழுதியிருப்பதன் மூலம் நீங்கள் மலையக சமூகத்தை அவமானப்படுத்த வேண்டும் எனும் மனநிலையில் இருப்பது மிகத் தெளிவாக புலப்படுகின்றது. அத்தோடு, அமைச்சர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை இவ்வாறு அமைச்சர் சார்ந்த சமூகத்தின் மீது மட்டும் குற்றம்சாட்டி தீர்த்துக் கொள்ள முனைவது கீழ்த்தரமான சிந்தனையாகும். உண்மையில் காத்திரமான கருத்தை கூறுவது போல் தந்திரமான முறையை கையாண்டு இதனை எழுதியிருக்கிறீர்கள். அதனை, நாம் உணர மாட்டோம் என்று நினைத்தால் அது உங்களது மடமைத்தனம்." இவ்வாறிருந்தது.

குறித்த, நபர் அப்பதிவிற்கு வழங்கிய தலைப்பும், அமைச்சருக்கான மேற்கோள் காட்டலையும் பார்க்கும் போது, அமைச்சர் மீதான காழ்ப்புணர்ச்சியை கொட்டித் தீர்ப்பதற்காக கொழும்பின், ஆமர் வீதியில், விலை மாதர்களாக இருப்பவர்கள் மலையகத் தமிழ் பெண்கள் என்று ஒரு மாயைத் தோற்றத்தை உருவாக்கி மலையகச் சமூகத்தை இழிவுபடுத்த முயன்றுள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

மலையக மக்களுக்காக செயற்பட்டபோது எனக்கு, அமைச்சர் மனோ கணேசனுடன் முகநூல் ஊடாக முரண்பாடு ஏற்பட்டது. அன்றில் இருந்து அமைச்சரை எனது பகையாளியாகவே நான் கருதுகிறேன். ஆனால், அந்தப் பகைக்காக அவர் மீது நான் காழ்ப்புணர்ச்சியை கொட்டிக் கொள்ள நான் முயன்றதில்லை. ஆனால், இங்கு குறித்த நபர், அமைச்சருக்காக அவர் சார்ந்த சமூகத்தை இழிவுடுத்தும் நோக்கில்  செயற்பட்டிருக்கின்றார். இதனை, இங்கு சுட்டிக்காட்ட காரணம், அரசியல்வாதிகள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் அதனை பொருத்தமான முறையில் கையாள வேண்டும் என்று கூறவே.

குறித்த, பதிவை எழுதியவரின் மனைவி கூட அவரது, செயற்பாட்டை கடுமையாக விமர்சித்திருக்கின்றார். அவரே, தனது, கணவர் என்ன நோக்கில் எழுதியுள்ளார் என்பதை சரியாக உணர்ந்திருக்கின்றார் என்பது சிறப்பம்சம்.

22.05.2019
#பிரகாஸ்

Comments

Popular posts from this blog

"கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிக்கும் மின்னல்"

"பயங்கரவாதச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக திரும்பும் போது மகிழ முடியுமா?"

"இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தின் தாக்கம் தமிழரை பாதிக்குமா?"