பால்குடிக் குழந்தைக்கு பொது மன்னிப்பு - ஞா.பிரகாஸ் (ஊடகவியலாளர்)

Search This Blog

Sunday, May 26, 2019

பால்குடிக் குழந்தைக்கு பொது மன்னிப்பு

இந்நாட்டில் கடும் போக்காளர்களுக்கு காண்பிக்கப்படும் பரிவு எந்தப் பாவமும் அறியாத குழந்தைகளுக்கு காண்பிக்கப்படவில்லை என்பதை எண்ணிப் பார்க்கையில் மனதுக்குள் பெரும் துயரம் ஏற்பட்டுவிடுகின்றது. அதிலும், நாட்டின் தலைவரால் குழந்தைகளுக்கு பரிவை காட்ட முடியவில்லை என்றால் அதைவிடக் கொடுமை வேறொன்றுமில்லை.

இங்கு, ஆனந்தசுதாகரனை யாரெல்லாம் மறந்துவிட்டனரோ நான் அறியேன். ஆனால், அதனை இன்று மீண்டும் நினைவூட்டும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. தாயை இழந்த நிலையில் 10 ஆண்டுகளாக சந்தேகநபராக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் பிள்ளைகள் கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு முன்னர் (30.03.2018 அன்று) கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்து தமது தந்தையை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, தமிழ், சிங்களப் புத்தாண்டு அன்று தந்தையை விடுதலை செய்வேன் என்று ஜனாதிபதியால் உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால், இன்று வரையில் அனந்தசுதாகரனுக்கு விடுதலை கிடைக்கவில்லை. இத்தகைய சூல்நிலையில் நீதிமன்றை அவமதித்த குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசார தேரர் சிறைக்கு சென்று ஒன்பதரை மாதத்தில் இன்று ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

ஆக, இரு அப்பாவிக் குழந்தைகளை விட ஞானசார தேரர் எனும் பால்குடிக் குழந்தைக்குத்தான் பரிவு காட்ட வேண்டும் என்று தமிழ் மக்களின் பேராதரவில் ஆட்சிப்பீடமேறிய ஜனாதிபதி சிறிசேன எண்ணியிருக்கின்றார். அதன்படி, தேரருக்கு பொது மன்னிப்பும் வழங்கியுள்ளார்.

குழந்தைகள், சிறுவர்கள் மீது அன்பு உள்ளவர் போல் செயற்பட்டு; தன்னைப் படுகொலை செய்ய முயன்று சிறை தண்டனைக்கு உள்ளாகிய சிவராசாவை பொது மன்னிப்பில் விடுதலை செய்தேன் என்று மேடைக்கு மேடை கூறி; செய் நன்றி மறவேன் என்று வாய்பேச்சில் பிதற்றிய ஜனாதிபதி இன்று, ஆனந்தசுதாகரனையும் ஏமாற்றி, அவரது குழந்தைகளையும் ஏமாற்றி, தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்துவிட்டு கடும் போக்காளர்களை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கின்றார்.

ஜனாதிபதி அவர்களே ஞானசார தேரருக்கு விரைவாகப் பொது மன்னிப்பு வழங்க முடியுமாயின் ஏன் உங்களினால் ஆனந்தசுதாகரனுக்கு, தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்க முடியாது?. அதிகார வர்க்கத்திற்கு மட்டும் தான் சட்டம் வளையுமா?. தமிழ் மக்கள் பிரதிநிதிகளே ரோஷம் இருந்தால் உங்களுக்கேனும் பரிவு காட்டும் மனம் இருக்குமாயின் அறிக்கையிடுவதை நிறுத்திவிட்டு இது போன்ற கேள்விகளை பாராளுமன்றில் எழுப்பி ஜனாதிபதியால் குழந்தைகள் ஏமாற்றப்பட்டதற்கு நீதி கோருங்கள்.

23.05.2019
#பிரகாஸ்