பயங்கரவாதத்தை தழுவி இரக்கமற்ற செயலை செயற்படுத்த ஆத்திரத்தை வளர்த்தனர்

முன்னதாக, ஒன்பது தற்கொலைக் குண்டுதாரிகளும் பெயர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். ஒருவாரத்தில் ஒவ்வொருவரையும் பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டனர். அதில் இருந்து, அவர்களது கதைகளும் வெளிப்பட ஆரம்பித்தது.
அடிப்படைவாதப் போதகரும், குண்டுத் தாக்குதல்களின் தலைவனாகவும் குற்றம்சாட்டப்படுபவர் மொஹமட் சஹ்ரான் (33). அவரது சொந்த ஊரான கிழக்கு மாகாணம் - காத்தான்குடியில் அவர் சிறிது அங்கீகாரத்தை பெற்றவராக இருந்தார். முஸ்லிம் நகரங்களில் உள்ள பிரதான மசூதிகள் அவரை நிராகரித்திருந்தது. அவர், 2017ம் ஆண்டில் மோதல் ஒன்றினையடுத்து தப்பிச் செல்வதற்கு முன்னர் சஹ்ரானின் உறுப்பினர்கள், இஸ்லாமியம் பற்றிய அவரது விளக்கத்தை சவாலுக்கு உட்படுத்திய சக போதகர் ஒருவருக்கு எதிராக அதிகாரிளிடம் முறையிட்டனர்.
ஆனால், கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடவடிக்கைகளுக்காக இளம், ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் ஏனையவர்களுடன் இணைந்துகொண்டனர். அடிப்படைவாதிகள் பல்வேறு நேரங்களில், பல்வேறு காரணங்களுக்காக சமூக வலைத்தளம் மற்றும் நேரடியாவும் சஹ்ரானை தொடர்பு கொண்டுள்ளனர்.
குற்ற விசாரணை பிரிவு (சிஐடி) மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு (ரிஐடி) ஒன்பது தற்கொலை குண்டுதாரிகளையும், இரண்டு தீவிரவாத அமைப்புக்களையும் கண்டுபிடித்தனர். தேசிய தௌஹீத் ஜமாஅத் சஹ்ரான் தலைமையிலும் ஜமாஅத்தி மில்லாத்தி இப்ரஹிம் சமூக வலைத்தளத்தில் சந்தித்த இளைஞர்களினால் அமைக்கப்பட்டது.
உள் அதிகாரப் போராட்டங்களினால் சீர்குலைந்த இரு அமைப்புக்களும் சஹ்ரானின் குறைந்த தொடர்புடைய குழுவாக கடந்த ஆறு மாதங்களில் புதிய நடவடிக்கைக்காக மாற்றப்பட்டது. இடங்களும் மாற்றப்பட்டது. அவர்கள் சித்தாந்தத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டனர். ஏப்ரல் 21 அன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தி 250 பேரை கொன்றனர். அவர்கள், அமைதியாகவும், திறமையாகவும் இரகியமான முறையில் பயங்கரவாத வலையமைப்பை கட்டியெழுப்பியுள்ளனர்.
பாணக்காரச் சகோதரர்கள் -
இஷானா ஏற்றுமதி நிறுவனம் கிட்டத்த மூன்று தசாப்தம் பழமைவாய்ந்த ஏற்றுமதி நிறுவனமாகும். அதன் நிறுவனர் வை.எம்.இப்ரஹிம் பரந்தளவில் பணக்காரராக அறியப்படுகிறார். அவரது நண்பர்கள் அனைவரும் அரசியல் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அவரை மதிக்கின்றனர். இயற்கையின் போக்கில் அவரது மகன்கள் அவரது வியாபாரத்தையும், செல்வத்தையும் மற்றும் ஒருவேளை, நல்லெண்ணத்தையும் பெற்றவர்களாகவும் இருந்திருப்பார்கள். ஆனால், மாறாக அவர்கள் தற்கொலைக் குண்டுத்தாரிகள் ஆவதை தெரிவு செய்துள்ளனர். இப்போது அவரது தந்தையை சிஐடியினர் தடுத்துவைத்து விசாரித்துவருகின்றனர்.
இன்ஷாப் அஹமட் மொஹமட் இப்ரஹிம் (33). அவர் இஷானா ஏற்றுமதி நிறுவனத்தின் மூத்த உறுப்பினரான முதலாளியின் மகன். இன்ஷாப், பிரபலமாக அறியப்படும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் பயின்றவர். அவர் பல்கலைக்கழகம் செல்லவில்லை. ஆனால் மசாலா வர்த்தகத்தின் தந்திரங்களை கற்றுக் கொண்டார். ஒன்பது உடன்பிறப்புக்களில் இன்ஷாப் இரண்டாவது, மற்றும் இல்ஹம் மூன்றாவது மகனுமாவார்கள். அவர்கள் வர்த்தகத்தில் நேரடியா ஈடுபட்டனர். இருவரும் குழுப் பணிப்பாளர்களாக இருந்தனர். அவற்றில் இன்ஷாப் தீவிரவமாக செயற்பட்டவர் என்று அவரது நிறுவனத் தகவல் ஒன்று கூறுகிறது. இருவரும் அடிக்கடி இந்தியா சென்று பணியாற்றியுள்ளனர். "இன்ஷாப் எமது தொழில்நுட்ப முதலாளியாக இருந்தாலும் அவர் எமக்கு கட்டளையிட்டத்தில்லை. உதவி கேட்பது என்றால் இதை செய்ய முடியுமா என்று கேட்பார்" என்கிறார் அவரது பணியாளர். ஆனால், மறுபுறத்தில் "இல்ஹம் (31) குடும்ப நிகழ்வுகளில் அரிதாகவே கலந்து கொள்வார், மக்களுடன் பெரிதாக பேசமாட்டார்" என்று ஒரு குடும்ப உறுப்பினர் கூறுகிறார்.
ஓர் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் இரு சகோதரர்களின் மாற்றத்தை கவனித்துள்ளனர். இன்ஷாப் தந்தையின் எதிர்ப்பை மீறி வட்டிக்கு கடன்களை நடைமுறைப்படுத்தினார். "எமது மதத்தில் வட்டிக்கு கடன் வாங்க அனுமதியில்லை, இதனை நிறுத்த வேண்டும்" என்று கூறியதாக மூத்த ஊழியர் நினைவுகூருகிறார். இருவரும், கடந்த ஆண்டு நிறுவனக் குழுவில் இருந்து விலகினர் என்றும் அவர் மேலும் கூறினார்.
இன்ஷாப் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெல்லம்பிட்டியில் அமைத்த செப்பு தொழிற்சாலையை தொடர்ந்தும் வழிநடத்தினார். இல்ஹம் தமது நிறுவனத்தில் ஒரு பகுதியை நிர்வகித்தார். ஏப்ரல் - 18ம் திகதி சென்றுவந்த, சின்னமன்ட் கிரான்ட் ஹோட்டலுக்கு இன்ஷாப் சென்று தன்னை வெடிக்க வைத்தார். அதேபோல், குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் மற்றும் இல்ஹகம் அருகில் உள்ள சங்ரிலா ஹோட்டலில் வெடித்தனர். அதேநாளில், இல்ஹமின் கர்ப்பிணி மனைவி பாத்திமா தெமட்டகொடயில் தற்கொலை தாக்குதலை நிகழ்த்தினார்.
சகோதரர்கள் இருவரும் முகநூல் மற்றும் தனியார் அரட்டை அறைகள் மூலம் சஹ்ரானுடன் தொடர்பை பேணி வளர்ந்திருக்கலாம் என்று விசாரணையாளர்கள் நம்புகின்றனர். "தாக்குதலின் பிரதான நிதி வழங்குனராக இல்ஹம் இருப்பதாக" உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் தீவிரவாதம் -
தொலைக்காட்சி ஒன்று தாஜ்சமுத்ரா ஹோட்டல் சிசிடிவி காட்சியை வெளியிட்டது. லதீப் ஜமீல் மொஹமட் (36) உணவகக் கதிரையில் அமர்ந்திருந்தார் சுமையான தனது பின்பக்கபேக்குடன். தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் அவர் அங்கிருந்து வெளியேறுகிறார். ஊழியர் ஒருவர் அவரது பயங்கரவாதத்தை சுமந்த பாரிய பேக்கினை கொண்டுசெல்ல உதவினார். ஐந்து மணி நேரங்களின் பின்னர் அவர் தெஹிவளையில் சிறிய ஹோட்டல் முன் வெடித்தார். ஜமீல் லண்டனில் கிங்ஸ்டன் பல்கலைக்கழத்தில் 2005 - 2006 விண்வெளி பொறியியல் பயின்றார். பின்னர், முதுகலை பட்டத்திற்காக அவுஸ்திரேலியா சென்றார். அங்கிருந்து 2013ம் ஆண்டு வெளியேறியுள்ளார். ஜமீலின் சகோதரி சம்சுல் ஹிதாயா டெய்லி மெயிலுக்கு கூறுகையில் "பிரிட்டனில் பயின்ற போது, அவர் சாதாரணமாக இருந்தார். ஆனால், அவுஸ்திரேலியா சென்று வேறு ஒரு மனிதிராக இலங்கைக்கு திரும்பினார்" என்று சொல்கிறார்.
அவுஸ்திரேலிய தகவல்களின்படி, அவுஸ்திரேலியாவில் தேடப்படுபவராக இருக்கும் இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதி நெயில் ப்ரகாஷுடன் தொடர்புடைய ஆதாரங்களின் அடிப்படையில் ஜமீல் வெளிப்படையான தீவிரவாதச் சார்பானவராக அடையாளப்படுத்தப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. ஜமீல் முன்னதாகவே, அடிப்படைவாதியாகிலிட்டார். அவர் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்த போது பிரிட்டிஸ் இஸ்லாமிய அறிஞர் அன்ஜம் சௌத்தரியை சந்தித்தார். 2003ம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்த போது 20 வயதிலயே ஜமீல் கடுமையாக பாதிக்கப்பட்டார் என்று அவரது நண்பர்கள் ஊடகத்திற்கு கூறுகின்றனர். ஜமீல் மற்றும் இப்ரஹிம் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருந்தனர். "இல்ஹமிற்கு ஒன்லைன் மூலம் ஜமீலுடன் தொடர்பு ஏற்பட்டது" என்று மூத்த விசாரணையாளர் கூறுகின்றார்.
ஜமீல் போலவே, அலவுதீன் அஹமட் முபாத் மாணவனாக இருந்தார். அவர் கொழும்பில் உள்ள கல்லூரி ஒன்றில் சட்டப் பட்டம் பெற்றிருந்தார். நடைமுறை பயிற்சியை பதிவு செய்துள்ளார். 3 வருடங்களுக்கு முன்னர் திருமணத்தை தொடர்ந்து மனைவியின் சொந்த ஊரான சாய்ந்தமருதில் வசித்துவந்துள்ளார். சாய்ந்தமருதில், ஏப்ரல் 27 நடந்த தாக்குதலில் 6 சிறுவர்கள், 3 பெண்கள் உட்பட தற்கொலை குண்டுதாரிகளுடன் 15 பேர் பலியாகினர். அவர்களில், சஹ்ரானின் தந்தையும், இரு சகோதரர்களும் அடங்குகின்றனர்.
முபாத், ஏப்ரல் - 14ம் திகதி இறுதியாக தனது சகோதரியின் வீட்டிற்கு கர்ப்பிணி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் புதிதாக பிறந்த குழந்தையை பார்க்க சென்ற பின்னர் சாய்ந்தமருதை விட்டு வெளியேறினார் என்று அவரது தந்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார். குண்டுத் தாக்குதல்கள் நடந்த அன்று காலை குடும்பத்தினருக்கு அழைப்பெடுத்த முபாத்தின் மனைவி "முபாத் எங்கே என்று தெரிந்தால் கூறுமாறு கேட்டுள்ளார்". மே - 5ம் திகதி முபாத்திற்கு குழந்தை பிறந்தது. 15 நாட்களில் தந்தை அந்தோனியார் ஆலயத்தில் குண்டு தாக்குதல் மூலம் பலரை தன்னுடன் சேர்த்து கொன்றுகுவித்தார்.
முன்னோடிகள் -
சஹ்ரானின் வலையமைப்பு குண்டு தாக்குதல் நடைபெறும் வரை கட்டுப்படுத்தப்படவில்லை. மூன்று ஆண்டுகளில் அவர்கள் பல்வேறு ஆதரவாளர்களை தேடிக் கொண்டனர். உதாரணத்திற்கு, அப்துல் ஹக் சகோதரர்கள். மாவனல்லயில், புத்தர் சிலைகளை உடைத்த போது 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் மொஹமட் சாதிக் அப்துல் ஹக், மொஹமட் சகீட் அப்துல் ஹக் இருவரும் தலைமறைவாகினர். குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இருவரும் பிடிபட்டனர். "குண்டுத் தாக்குதல்களில் ஹக் சகோதரர்கள் பங்குபற்றிய ஆதாரம் இல்லை" என்று இராணுவ புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், "அவர்கள் குண்டுதாரிகளுக்கு பயிற்சி வழங்கியிருக்கலாம்" என்று ஏனைய புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹக் சகோதரர்கள் மாவனல்லயில் பக்தி உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் தந்தை இப்ரஹிம் மௌவி ஒரு சிறந்த, அறியப்பட்ட போதகராகவும், ஜமாஅத்-இ இஸ்லாமி எனும் செல்வாக்கு மிக்க மதச் சமூக அமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார். சாதீக் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை. கராத்தே திறமைகளினால் அறியப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. அப்துல் ஹக் சகோதரர்கள் "ஒன்று அல்லது இரண்டு தடவை சஹ்ரானை சந்துள்ளனர்" என்று நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகிறார்.
விசாரணையாளர்களினால் முன்னைய சந்திப்பை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், சகோதரர்கள் 2017ம் ஆண்டில், சஹ்ரானின் கோட்பாட்டு காணொளிகளினால் கவரப்பட்டு அவர்கள் திசை திருப்பப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. "எமது விசாரணைகளில் சிலை உடைப்பு திட்டத்திற்கு முன்னர் 2018ம் ஆண்டில் இருந்து அவர்கள் சஹ்ரானுக்கு நெருக்கமாக இருந்தது புலப்படுகிறது" என்று மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
ஹக் சகோதரர்களின் நண்பர்கள், அவர்களிடம் வளர்ந்துவரும் தீவிரவாதத்தை அறிந்திருந்தனர். ஜமாத்-இ இஸ்லாமி மற்றம் அதன் இளைஞர் பிரிவான இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். சாதிக் புலமைப்பரில் ஒன்றுக்காக மூன்று மாதங்களில் திரும்பவதாக உறுதியளித்து துருக்கி சென்றவர். அங்கு நான்கு மாதங்கள் தங்கினார். "அங்கிருந்து சிரியாவிற்கு சென்றதாக நாம் கேள்விப்பட்டோம்" என்று அதனுடைய உறுப்பினர் ஒருவர் கூறுகிறார்.
"அவர்களது தந்தை, அவர்களை முன்னைய பாதையில் கொண்டுவர முயற்சித்தார். ஆனால், அவர்கள் அதற்கு பதிலாக தந்திரோபாயமாக மௌவியை தமது தீவிரவாத எல்லைக்குள் அழைத்து சென்றனர்" இப்படி உறவினர் ஒருவர் கூறுகிறார். "ஒரு ஆண்டிற்கு முன்னர் அவர்களது தந்தையும் ஜமாத்-இ இஸ்லாமி அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் எமது அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தினார்" என்று அதனுடைய உறுப்பினர் ஒருவர் கூறுகிறார். மாவனல்லையில் 2001ம் ஆண்டு முஸ்லிம் விரோத தாக்குதல் இடம்பெற்றது. முஸ்லிம்கள் தமது சொத்துக்களை இழந்தனர். ஆனால் பதிலடி கொடுக்கவில்லை. அப்போது, ஹக் சகோதரர்கள் இளம் வயதினராக இருந்தனர்.
ஒரு திருமணம் மற்றும் ஒரு கூட்டணி -
சஹ்ரான் மற்றும் அடிப்படைவாத இளைஞர்களின் தொடர்பு 2016ம் ஆண்டு திருமணம் ஒன்றில் முறைசாரா கூட்டணியாக மாற்றப்பட்டுள்ளது. விசாரணையாளர்கள் தெரிவிக்கையில், "இந்த திருமணம் காத்தான்குடியில் நடந்தது. ஜமாத்தி மில்லாத்தி இப்ரஹிம் உறுப்பினர்கள் பலர் சென்றிருந்தனர். அங்கு, இல்ஹம் மற்றும் ஜமீலும் இருந்தனர் என்று நினைக்கிறோம்". 2017ம் ஆண்டு சஹ்ரான் தலைமறைவாகிய பின்னர் அவர்கள் வட்சப் மற்றும் டெலிகிராம் மூலம் தொடர்புகளை பேணிக்கொண்டனர். ஆனால், விசாரணையாளர்களின் கூற்றுப்படி "2018ம் ஆண்டின் நடுப்பகுதியில் தாக்குதலுக்கு திட்டமிருக்கவில்லை. ஆனால், எதிர்கால தாக்குதலுக்காக தயாராகினர். வண்ணாத்துவில்லுவில் பெருந்தொகை வெடிமருந்து கைப்பற்றப்பட்டது முக்கிய விடயமாக சுட்டிக்காட்டப்படுகிறது".
"சந்தேகநபர்களை விசாரணை செய்ததில் இருந்து சஹ்ரான் தேவாலயங்களை தாக்குவது தொர்பில் பேசினார் என்பது தெளிவாகிறது" என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். அவர், நியூசிலாந்து தாக்குதலினால் இந்த சதித்திட்டமிடப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறார். ஆயினும், "நியூசிலாந்து தாக்குதல் மார்ச்சில் நடந்தது. இயல்பாக ஒரு அதிநவீன தாக்கதலுக்கு திட்டமிடல் மற்றும் நீண்ட காலம் ஒன்று தேவைப்படும். அந்த கோட்பாடுகளை ஆதரிக்கும் எந்த ஆதாராமும் இல்லை என்று மேலுமொரு மூத்த அதிகாரி குறிப்பிடுகிறார். உண்மையில், சந்தேகத்திற்குரிய நபர்கள் இஸ்லாமிய அரசின் தலைமையுடன் நேரடி முகவர்களாக இருக்கின்றார்களா என்பதே முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கின்றது என்று அவர் கூறுகிறார். ஜமீல் மற்றும் சஹ்ரானின் சகோதரன் ரில்வான் உள்ளிட்ட சில சந்தேகநபர்கள் சில ஆண்டுகளுக்கு முன் சிரியா சென்று திரும்பிய இஸ்லாமிய அரசு உறுப்பினர்கள் ஐவரில் இருவருடன் தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் காண்பிக்கின்றது. ஆனால், குண்டுதாரிகளுக்கு இஸ்லாமிய அரசுத் தலைமையுடன் நேரடி தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்கிறார்.
இஸ்லாமிய அரசின் தலைமையுடன் சஹ்ரான் சுதந்திரமாக தொடர்பில் இருந்தாரா என்து தெளிவற்றதாக இருக்கின்றது. அவர் அடிக்கடி சாம் வழிமுறைகளை பெற்றுள்ளதாக சிரியாவை பற்றி காணொளிகள், உரையாடல்கள் மூலம் கூறிவந்தார். விசாரணையாளர்களிடம் மற்றுமொரு முரண்பாடு காணப்படுகிறது. "இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஏன்? சக சிறுபான்மை சமூகத்தை இலக்கு வைத்தனர். அவர்களுடன் எந்த விரோதமுமம் இல்லை" என்பதால். சாய்ந்தமருது தாக்குதலின் போது அங்கு வெள்ளை ஆடைகள் மீட்கப்பட்டது. அது பௌத்த பெண்கள் தமது மதத்திலத்திற்கு அல்லது பிரார்த்தனைக்கு செல்லும்போது அணிவதாகும். மே 18-19 அல்லது ஜூலை கண்டிப் பெரஹராவின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஜமாத்தி மில்லாத்தி இப்ரஹிம் உறுப்பினர்கள் ஆரம்பத்தில் சிரியாவில் இஸ்லாமிய அரசுடன் இணைய நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், சிரியா, ஈராக்கில் அவர்கள் வீழ்ச்சியடைந்த போது திட்டத்தை கைவிட்டனர் என்று அதிகாரபூர்வ தகவல் ஒன்று கூறுகிறது. அதில் இருந்து இலங்கையில் தாக்குதல் ஒன்றை செயற்படுத்த இல்ஹம் ஆர்வம் கொண்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு சதியின் மூலம் அவருக்கு பதில் கிடைத்தது. அவரது சகோரர் இன்ஷாப் இறுதி நேரத்தில் வளைக்கப்பட்டார் போல் தெரிகிறது. அவர் மே மாதம் மக்காவிற்கு குடும்பத்தாருடன் செல்வதற்கு விமான முற்பதிவு செய்திருந்தார். உயிர்த்த ஞாயிறுக்கு சில வாரங்கள் முன்னர் அவர்கள் ஒரு சரியான அணியாக உருவானார்கள். அவற்றுக்கான பாத்திரங்கள் பட்டியலிடப்பட்டது. "இறுதி வாரத்தில் அவர்கள் த்ரீமா (threema) எனும் அதி உயர் பாதுகாப்பை கொண்ட மெசஞ்சர் சேவையை பயன்படுத்தியுள்ளனர்" என்று ஒரு அதிகாரி கூறுகிறார்.
மேலும், எதிர்கால ஆய்வுகளின் மூலம் "இந்த சதித்திட்டம் நியூசிலாந்து தாக்குதலுக்கு பின்னர் அல்லது இலக்கு மாற்றப்பட்டு நடத்தப்பட்டதா? என்பது வெளிப்படுத்தப்படும். ஆனால் தற்கொலை குண்டுதாரிகள் பயங்கரவாதத்தை தழுவி இரக்கமற்ற செயலை செயற்படுத்த சமீபத்திய ஆண்டுகளில் போதுமான ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டனர் என்பது தெளிவாக தெரிகின்றது. அதற்கு பிறகு திகதி, இடம், இலக்கு என்பது வெறும் தகவல் மட்டுமே!.
(குறிப்பு: ஆங்கிலக் கட்டுரையின் சில முக்கியமற்ற பந்திகள் தவிர்த்து எழுதப்பட்டது)
ஆங்கிலத்தில் :- மீரா ஸ்ரீனிவாசன் - (த ஹிந்து).
தமிழில் :- ஞா.பிரகாஸ் - (ஆறாம் அறிவு).

Comments

Popular posts from this blog

"கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிக்கும் மின்னல்"

"பயங்கரவாதச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக திரும்பும் போது மகிழ முடியுமா?"

"இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தின் தாக்கம் தமிழரை பாதிக்குமா?"