"கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிக்கும் மின்னல்"

யற்கை அனர்த்தங்களில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் பொறுப்பற்று - அறிவுறுத்தல்கள் குறித்து கவனயீனத்துடன் இருப்பதால் நாட்டில் பல உயிர்கள் பறிபோகக் குறித்த செயல்பாடு காரணமாக அமைந்துவிடுகின்றது. அத்தகைய துயரச் சம்பவம் தான் நேற்றைய தினம் குப்பிளான் பகுதியில் இடம்பெற்றது. இதனால், கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று உயிர்கள் பரிதாபமாகப் பறிபோயிருக்கின்றது.

நேற்று குறித்த சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்னர், நண்பர் ஒருவருடன் உரையாடும் போது சுட்டெரிக்கும் வெயிலை தனிக்கும் வகையில் வலிகாமத்தில் மழை பெய்வது பற்றிப் பேச்செடுக்கையில், "தம்பி, இடி, மின்னல் நேரத்தில கவனமா இரும் போன் எல்லாம் பாவிக்காதையும்" என்று நண்பர் கூறினார். பதிலுக்கு நான், "தம்பி, மின்னல் எல்லாம் எங்கள நெருங்கக் கூட முடியாது" எனப் பகிடியாகப் பதிலளித்தேன். மறுமுனையில், எனக்கு சோகமான செய்தி அனுப்பப்படுகிறது "குப்பிளானில் மின்னல் தாக்கி மூவர் பலி" என்று.

இதையேன் கூறுகிறேன் என்றால் மழையின்போது இலேசாக இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இது மிதமான இடி, மின்னல் தானே, ஒன்றுமாகாது என்று பகிடிபோல் பலரும் அசமந்தமாக இருந்துவிடுவார்கள். இடி, மின்னல் அதிகளவில் ஏற்படாத சிலசமயத்தில் நான்கூட அவ்வாறு இருந்துவிடுவதுண்டு. ஆனால், அது கூட எதிர்பாராத நேரத்தில் ஆபத்தாக மாறிவிடலாம். இயற்கையின் தாக்கம் எந்நேரத்தில் ஆபத்தை தரும் என்று கணிப்பிட முடியாது. எனவே, அது தொடர்பில் கவனமாக இருந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

நாட்டில் மின்னல் தாக்கம் காரணமாக கடந்த 4 நாட்களில் குப்பிளான் சம்பவம் உட்பட நால்வர் பலியாகியுள்ளனர். நேற்றைய சம்பவத்தினால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒரு நபரது மரணமானது அந்தக் குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களையும் பாதிப்படைய செய்யும் என்பதை இதன் மூலம் நாம் உணரமுடியும். இப்போது, மழைக்காலம் ஆரம்பிக்கத் தொடங்கியிருக்கிறது. எனவே, அ.மு.ம.நிலையம் விடுக்கும் மின்னல் தொடர்பான அறிவுறுத்தல்களை நாங்கள் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இன்றும் மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்படும் பகுதிகளுக்கு மின்னல் குறித்து அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.

நேற்றைய சம்பவத்தை உதாரணமாகக் கொண்டு விவசாயிகள் உட்பட அனைவரும் இனிவரும் காலங்களில் மழை பொழிவின் போது அவதானத்துடனிருக்க வேண்டும். மின்னல் தாக்கத்தின் போது மரங்களுக்கு கீழ் அமைக்கப்பட்ட கொட்டில்களில் இருப்பது ஆபத்தானது என அறிவுறுத்தப்படுகிறது. எனவே, தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அது குறித்து கவனம் கொள்ள வேண்டும். மரங்களுக்கு அருகில் ஒதுங்குவதை தவிர்த்தாக வேண்டும். அதேபோல், பொதுவாக அனைவருக்கும் தெரிந்த கைபேசி பாவனை, தொலைக்காட்சி பார்த்தல், மின் உபகரனப் பாவனைகள் போன்றவை தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

அதேபோல், இறுதி இடி, மின்னல் தாக்கத்தினை தொடர்ந்து 30 நிமிடங்கள் வரையில் எமது செயல்பாடுகளில் அவதானம் இருக்க வேண்டும் என்றும் மின்னல் தொடர்பில் அறிவுறுத்தப்படுகிறது. மின்னல் தாக்கும் போது மரங்கள், வேலிகள் இல்லாத பகுதியில் கீழே குனிந்து குந்தி இருந்து முழங்கால்களுக்கு இடையில் தலையை வைத்தவாறு அமர்வது தாக்கத்தை குறைக்கும் எனவும் அறிவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். (இதில் இடம்பெறும், மின்னல் தாக்கம் குறித்த சில அறிவுறுத்தல்கள் கூகுள் துணையுடன் பெறப்பட்டது). இவற்றை, நாம் கவனத்தில் கொண்டால் அல்லது ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்தி அவதானமாக இருப்போமேயானால் எதிர்பாராத சமயத்தில் எமது உயிர் பறிபோவதை நாம் காப்பாற்ற அவை காரணமாக இருக்கும். ஆகவே, நாம் விழித்துக் கொண்டு அனைவருக்கும் விழிப்பூட்ட வேண்டிய தருனமிது.

இது, இவ்வாறு இருக்க, நேற்று சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் அடிக்கடி மின்னல் தாக்கம் நிகழ்வதாக அது தொடர்பில் ஆராயுமாறு இன்று மாவட்ட அரச அதிபர் உத்தரவிட்டதுடன், தொலைத்தொடர்பு கோபுரங்களின் இடி தாங்கிகள் குறித்தும் மீளாய்வு செய்யப் பணித்திருக்கின்றார். இத்தகைய ஆய்வுகளை மழைக்காலம் அண்மிக்கும் போது உரிய அதிகாரிகள் ஆய்வு செய்வதும், ஆபத்து பற்றி தகவல் வெளியிடுவதும். குறிப்பாக வயல்கள், தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்களுக்கு அறிவுறுத்த முயற்சிப்பதும் முன் எச்சரிக்கையானதாக இருக்கும் என்று எனது மனதிற் தோன்றுகின்றது.

17.04.2019
#பிரகாஸ்

Comments

Popular posts from this blog

"பயங்கரவாதச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக திரும்பும் போது மகிழ முடியுமா?"

"இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தின் தாக்கம் தமிழரை பாதிக்குமா?"