."இரத்தம் குடிப்பவர்களின் பலியெடுப்பாக மாறிய சிவப்பு ஞாயிறு"


யுத்தம் நிறைவுற்ற எமது நாட்டில் நிரபராதிகளாான அப்பாவி மக்களை இப்படியொரு தொடர்ச்சியான தற்கொலை தாக்குதல்கள் மூலம் கொன்று குவித்து இரத்தம் பார்க்கும் சம்பவம் இடம்பெறும் என்று நான் மட்டுமல்ல, இந்த நாட்டு மக்கள், சர்வதேச நாடுகள் கூட எண்ணிப்பார்த்திராது. அந்தளவிற்கு மிக மோசமாக இரத்த வெறி கொண்டு ஒரே சமயத்தில் கண்ணிமைக்கு நேரத்திற்குள் நூற்றுக்கணக்கிலான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு நாளான நேற்றைய நாள் வழமைபோல் உற்சாகத்துடன் விடிந்திருந்தது. காலை வேளையில் ஒன்பது மணிக்குட்பட்ட நேரத்தில் வெடிப்பு சம்பவம் என்று செய்தி கிடைக்கும்போது சாதாரண வெடி விபத்து என்று எண்ணியவாறு இருக்கையில் தான் நாடு முழுவதும் பாரிய குண்டு தாக்குதல் இடம்பெற்றது எனும் செம்தி கிடைத்தது. அறிந்து கொண்டபோது தூக்கிவாரிப்போட்டது போலிருந்தது. மக்களில் சிலர் பிராத்தனை செய்து கொண்டிருந்தது போலவே மரணித்த காட்சிகள் கொடும் துயர். "என்னிறைவா! என்னிறைவா! ஏன்? எம்மை கைவிட்டீர்!" என்று கதறும் நிலை. மக்களின் இரத்தத்தை தாங்கிய நிலையில் இயேசுவின் சிலை. இலங்கையின் அழகை இரசிக்க வந்தவர்கள் கோஹ்டல்களில் மாண்டுபோயினர். இவையனைத்தும் கொடூரத்திலும் கொடூரமானது.

உற்சாகத்துடன் விடிந்த ஞாயிறுப்பொழுது (இலங்கை) இரத்த வெள்ளத்தில் தோய்ந்து போனது. யார்? இந்தக் கொடூரத்தை செய்திருந்தார்கள் என்று பல சந்தேகங்கள் எழுந்தது. சமூக வலைத்தளங்களின் வழியே முன்கூட்டியே தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவு எச்சரிக்கை வழங்கியது (தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் தாக்குதல் நடக்கும்) என்றொரு அறிக்கையும் வெளியானது. போலியாக, இருக்கும் என்று எண்ணியபோது இறுதியில் அதுவே உண்மையாகிப் போயுள்ளது.

எமது நாட்டில், அரசாங்கமும், புலனாய்வுப் பிரிவினரும் மக்களின் போராட்டங்களை அடக்கி ஒடுக்கும் வகையில் கண்காணித்ததுடன், முன்னாள் போராளிகளை தண்டிப்பது, அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பு என்றும் ஒரே குட்டைக்குள் சுழன்று கொண்டிருந்ததே தவிர நாட்டிற்கு, மக்களுக்கு ஏற்படக்கூடிய தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வில் ஈடுபடவில்லை என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. அதன்காரணமாகவே, மனிதம் என்றால் என்னவென்று அறியாமல் உலக நாடுகளில் அப்பாவி மக்களை மதம் எனும் பெயரைச் சொல்லி கொன்று குவித்த தீவிரவாத்தின் கைகள் இலங்கையில் சுதந்திரமாக ஓங்கச் செய்திருக்கின்றது.

அந்திய தீவிரவாத சக்திகளுக்கு (இறத்தவெறியர்கள்) அடிமையாாகி நாட்டை அழிக்க நினைப்பவர்கள் பற்றி அரசாங்கம் விழிப்புடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், சர்வதேச புலனாய்வு பிரிவினர் இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெறவிருப்பதை முற்கூட்டியே எச்சரிக்கை செய்திருக்கின்றது. எனினும், எமது அரசாங்கம், பாதுகாப்புத் துறை அதனை அசட்டை செய்யாமல் விட்டதன் விளைவு இன்று பிஞ்சுப் பிள்ளைகள் உள்ளிட்ட 300 பேரின் உயிரை பலியெடுத்து நிற்கின்றது.

முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதை இப்போது உண்மை என்று ஒத்துக் கொள்ளும் அரசாங்கம் முன்னரே நாடுதழுவிய விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு உசாரடைந்திருந்தால் நேற்று இத்தனை நூற்றுக்கணக்கிலான உயிர்கள் பறிக்கப்பட்டிருக்காது. உயிர்த்த ஞாயிறு சிவப்பு (இரத்தம் தோய்ந்த) ஞாயிறாகவும் மாறியிருக்காது. முதல் முறையாக எமது நாட்டுக்குள் நுழைந்துள்ள மத அடிப்படை தீவிவாதிகளை அழித்து, எஞ்சியுள்ள மக்களை காப்பாற்ற இனியேனும், எமது நாட்டின் அரசாங்கம் முழுமூச்சுடன் செயலாற்ற வேண்டும். உயிரிழந்த மூவின மற்றும் பன்னாட்டு மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

22.04.2019
#பிரகாஸ்

Comments

Popular posts from this blog

"கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிக்கும் மின்னல்"

"பயங்கரவாதச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக திரும்பும் போது மகிழ முடியுமா?"

"இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தின் தாக்கம் தமிழரை பாதிக்குமா?"